Wednesday, September 14, 2011

அழகிரி தொடக்கி வைத்தார். அதில், இளவரசர் சிக்கிக் கொண்டார்!

மு.க.அழகிரி தேவையில்லாத விஷயத்தில் வாயைத் திறந்து சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்று, தி.மு.க. வட்டாரங்களிலேயே பேசத் தொடங்கியுள்ளார்கள். மதுரைக்கு அருகே கிரானைட் தொழில் செய்தது பற்றிய சட்டப் பேரவைப் பேச்சும், அதற்கு அழகிரி எகிறிய எகிறலையும் பற்றியதுதான் இந்த விவகாரம்.

சட்டப்பேரவையில் அமைச்சர் வேலுமணி, “கடந்த ஆட்சியில், மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை வளைத்து, அப்போதைய முதல்வரின் மகன் அழகிரியும் அவரது கூட்டாளிகளும் கிரானைட் குவாரிகள் நடத்தி கொள்ளையடித்தனர். தற்போது, அந்த குவாரிகள் மூடப்பட்டு விட்டன. அவற்றுக்கான லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்று பேசியிருந்தார்.

அமைச்சரின் இந்தப் பேச்சு பத்திரிகைகளில் வெளியான அன்று மாலையே, பத்திரிகையாளர்களை அழைத்த அழகிரி, இது என்மீது சுமத்தப்பட்ட அவதூறு. அமைச்சரிடம் இதற்கு ஆதாரம் இருக்கிறதா? அவரால் ஆதாரம் காட்ட முடியாவிட்டால், நான் மானநஷ்ட வழக்கு போடுவேன். அமைச்சரை கோர்ட்டுக்கு இழுப்பேன்” என்றெல்லாம் எகிறியிருந்தார்.

அழகிரி இப்படி அதிரடியாக சவால் விட்ட உடனேயே, தி.மு.க. விட்டாரங்களில் தணிந்த குரலில், “இவருக்கு ஏன் தேவையில்லாத வேலை? மடியில் கனத்தை வைத்துக்கொண்டு இப்படி வார்த்தைகளை விடலாமா?” என்று கிசுகிசுக்கத் தொடங்கியிருந்தனர். அதை விசாரிக்கப் போனால், “பிசினெஸ் அழகிரியுடையது அல்ல என்பது உண்மைதான். ஆனால், அழகிரி மகன் துரை தயாநிதி தனி ட்ராக்கில் ஓடிய வியாபாரமல்லவா இது?” என்றார்கள்.

சட்டப் பேரவையில் “மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்” என்று மொட்டையாகக் கூறப்பட்டிருந்தாலும், இந்த பிசினெஸ்ஸின் எக்ஸாக்ட் ஸ்பாட், மதுரைக்கு வெளியே மேலூருக்கு அருகே உள்ளது.

கற்கள் வெட்டியெடுக்கப்பட்ட மலையின் பெயர், சக்கரைபீர் மலை. திருப்பத்தூர் ரோட்டில் சென்றால் வரும் கீழவளவு என்ற இடத்தில் உள்ளது இந்த மலை. கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஹெவி எக்யூப்மென்ட்ஸ் மூலம், சக்கரைபீர் மலையின் நடுவே, அதைப் பாதியாக வெட்டி கற்கள் அகற்றப்படுவதை தொலைவில் இருந்தே காணக்கூடியதாக இருந்தது.

இதெல்லாம் ஒன்றும் ரகசியமாக நடைபெறவில்லை. அப்பகுதி மக்களைக் கேட்டால் அலட்சியமாக, “அழகிரி மகன் மலையை லீசுக்கு எடுத்து வெட்டினாரு” என்கிறார்கள்.

ஆதாரங்களைக் காட்டாவிட்டால் நீதிமன்றம் போவேன் என்று அழகிரி சவால் விடப்போக, தொழில்துறை அமைச்சர் வேலுமணி சக்கரைபீர் மலைக்கே நேரில் போய் இறங்கிவிட்டார். அவருடன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சகாயம் ஆகியோரும் ஆஜர்.

அழகிரியின் மகன் துரை தயாநிதி, மற்றொரு தி.மு.க. பிரமுகர் சூடம்மணியின் மகன் நாகராஜ் என்பவருடன் சேர்ந்து நடத்திய வியாபாரம் அது. இவர்கள் இருவரும் நடத்திய நிறுவனத்தின் பெயர், ஒலிம்பஸ் கிரானைட். இவர்களது கிரானைட் தொழிற்சாலை அமைந்துள்ள நிலத்திலும், உரிமையாளர் விஷயத்தில் வில்லங்கம் இருப்பதாகத் தெரிகிறது.

ஆட்சி மாறியதும் அவசர அவசரமாக, ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தின் உரிமையாளராக துரை தயாநிதி இல்லை என்று காட்டுவதற்கு சில டாக்குமென்ட்ஸ் தயாரித்திருக்கிறார்கள். எல்லாமே பேக்-டேட் பண்ணி, தயாரிக்கப்பட்ட இந்த ஆவணங்களை நம்பினால், 2010ம் ஆண்டில் இருந்தே துரை தயாநிதிக்கு அந்த நிறுவனத்துடன் தொடர்பு இருக்கக்கூடாது.

ஆனால், ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட முறை, தில்லுமுல்லைக் காட்டிக் கொடுக்கின்றது என்கிறார்கள்.

அதே நேரத்தில் இதற்கான உரிமம் வாங்கப்பட்ட போது செய்யப்பட்ட விண்ணப்பம், மற்றும் ஆரம்ப கால ரிஜிஸ்ட்ரேஷன் ஆகியவற்றில் துரை தயாநிதியின் பெயர் இருப்பதை யாரும் மாற்றிவிட முடியாது. காரணம், அவை ஏற்கனவே பதிவாகிவிட்ட தகவல்கள்.

அதேபோல, இவர்கள் ஏற்றுமதி செய்த குவான்டிட்டி, அதற்கான இன்வாயிஸ், வால்யூவேஷன் சர்ட்டிபிகேட் ஆகியவையே போதும், இங்கு வெட்டி எடுக்கப்பட்ட கற்களின் அளவை உறுதிப்படுத்த என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். கிரானைட் குவாரி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே, வெட்டப்பட்ட கற்களின் அளவு, உரிமம் கொடுக்கப்பட்ட அளவைவிட, பல மடங்கு அதிகம் என்பதை மிகச் சுலபமாக நிரூபிக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

அண்ணன் அஞ்சா நெஞ்சர்தான், ஆழம் தெரியாமல் வாயைத் திறந்து விட்டாரோ!

-மதுரையிலிருந்து இரா.பிரபாகரின் குறிப்புகளுடன், ரிஷி.

No comments: