Monday, August 8, 2011

இத்தாலிய முறைப்படி சமையல்

சீனாவின் ஃப்ரைடு ரைஸும், நூடுல்ஸும் இப்போது கிடைக்காத தெருக்களே இல்லை எனும் அளவுக்கு நம்மூரில் அவையெல்லாம் பிரபலமாகிவிட்டன. ஆனால், சீனாக்காரர் ஒருவரிடம் இந்த ஃப்ரைடு ரைஸ் மற்றும் நூடுல்ஸை கொடுத்தால்... 'இது என்ன?’ என்றுதான் கேட்பார். காரணம், நம்முடைய சுவைக்கு ஏற்ப அந்த அயிட்டங்களை முழுக்க முழுக்க இங்கே மாற்றி வைத்திருக்கிறோம். பீட்ஸாவுக்கும் இதே நிலைதான்!



பீட்ஸாவின் தாயகம் இத்தாலி. ஆனால், இங்கே... தடிமனாக... சீஸ் வழிந்தோடும் அளவுக்குக் கொழுப்புச் சக்தி கொண்டதாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நம்முடைய நாக்குச் சுவைக்கு ஏற்ப... பீட்ஸாவையே மாற்றி வைத்திருக்கிறோம். உண்மையில் இதை 'இந்திய பீட்ஸா' என்றுதான் சொல்ல வேண்டும்.

'அப்படினா... இத்தாலி பீட்ஸா?'

சென்னை, நந்தனம் சேமியர்ஸ் சாலையில் இருக்கும் இத்தாலியன் ரெஸ்டாரன்ட்டான 'டஸ்கானா'வில் இத்தாலி பாரம்பரியப்படி தயாரித்து கொடுக்கிறார்கள். இங்கே பீட்ஸா செய்வதில் எக்ஸ்பர்ட்... வில்லி வில்சன். இவர்தான் இந்த ஹோட்டலின் செஃப், செயல் தலைவர் எல்லாமே!

''இத்தாலியின் புராதன முறைப்படி, விறகை எரித்து நெருப்பு மூட்டித்தான் இங்கே பீட்ஸா தயாரிக்கிறோம். மெல்லியதாக, காய்கறிகள் நிறைந்ததாக இருக்கும் இதுதான் ஒரிஜினல் இத்தாலியன் பீட்ஸா'' என்று சொல்லி, செயல்முறை விளக்கமும் கொடுத்த வில்சன், அடுத்து நமது வாசகிகளுக்காக 'பாஸ்தா அரேபியாட்தா' எனும் ரெசிபியை தயாரித்துக் காட்டினார். இது, '2 மினிட்ஸ் நூடுல்ஸ்' மாதிரி உடனடியாக தயாரிக்கக்கூடிய... இத்தாலி டிஷ்!

பாஸ்தா அரேபியாட்தா

தேவையான பொருட்கள்: பாஸ்தா - 100 கிராம், நறுக்கப்பட்ட பூண்டு - 10 கிராம், ஆலிவ் ஆயில் - 20 கிராம், பழுத்த மிளகாய் - 5 கிராம், பாஸ்தா-டொமாட்டோ சாஸ் - 80 கிராம், துளசி இலை - 5 கிராம் (பெருமாள் கோயில் துளசியல்ல. பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் 'சமையல் துளசி' என்று கேட்டால் கிடைக்கும்), கேரட், தக்காளி, புரூக்கோலி துண்டுகள் (மொத்தமாக) - 200 கிராம், உப்பு, வறுத்துப் பொடித்த மிளகு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள். முதலில் கேரட், பிறகு புரூக்கோலியை போட்டு வேக வைத்து தனியே எடுத்து வையுங்கள். பிறகு, அந்தத் தண்ணீரில் பாஸ்தாவை வேக வைத்து, வடிகட்டி வையுங்கள். பிறகு, அகலமான ஒரு பேனில்... ஆலிவ் ஆயில் விட்டு, காய்ந்ததும் பூண்டு, பழுத்த மிளகாய், கேரட், தக்காளி, புரூக்கோலி, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். வேகவைத்த பாஸ்தாவை நிறைவாகச் சேர்த்து கொஞ்ச நேரம் கிளறுங்கள். பூண்டு வாசனை அடங்கியதும், அடுப்பில் இருந்து இறக்கி, பாஸ்தா-டொமாட்டோ சாஸை ஊற்றி, அது நன்றாகப் பரவும்படி செய்யுங்கள். கடைசியாக, துளசி இலைகளைத் தூவி சுடச்சுட உபசரியுங்கள்.

No comments: