தி.மு.க.வுக்குள் உட்கட்சி மோதல்கள் ஒருபக்கமாக நடந்துகொண்டிருக்க, தலைவரின் குடும்பத்துக்குள் மோதல்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது. தி.மு.க.வில் தலைவர் குடும்பத்துப் பிரச்சினையே கட்சியின் பிரதான பிரச்சினை என்பதால், குடும்ப மோதல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இன்றைய நிலையில், குடும்பத்துக்குள் கிட்டத்தட்ட அனைவருமே ஸ்டாலினுக்கு எதிராகத் திரும்பியிருப்பதாக சொல்கிறார்கள். கடந்த சில வாரங்களாகவே நிலைமை ஸ்டாலினுக்கு எதிராக இருப்பதாகவும் கூறுகிறார்கள். சமீபத்தில் கோவையில் நடைபெற்ற பொதுக்குழுவுக்கு ராசாத்தி அம்மாள் போனதுகூட, தயாளு அம்மாள் சொல்லித்தான் என்கிறார்கள்.
ராசாத்தி அம்மாளும், அழகிரியும் பொதுக்குழுவில் கலந்து கொண்ட காரணத்தால்தான், ஸ்டாலினைத் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்த பலரும் தயங்கினார்கள் என்பது தி.மு.க.வில் பலரும் அறிந்த ரகசியம்.
அப்படியிருந்தும் பொதுக்குழுவில் ஸ்டாலினுக்கு ஆதரவாக சிலர் பேசத்தான் செய்தார்கள். அவர்களது பேச்சுக்களைக் கூர்ந்து கவனித்த கருணாநிதி, அப்படிப் பேசிய அனைவருமே, முன்கூட்டியே திட்டமிட்ட முறையில் பேசியதாகக் கருதுகிறாராம்.
அந்தத் திட்டமிடலைச் செய்து கொடுத்தது ஸ்டாலின்தான் என்பது, அவரது ஊகம்.
ஸ்டாலினை அழைத்து நேரடியாகவே, “கட்சிக் கூட்டத்தில் கட்சிக்காரர்களையே செட் பண்ணிப் பேசவைப்பது எப்படி என்று எனக்கே காட்டுகிறீர்களா? இதுபோல எத்தனை பேரைப் பார்த்தவன் நான்? எத்தனை வருடங்களாக இந்தக் கட்சியை நடத்துகிறேன். இதில் யார் சொந்தமாகப் பேசுவார்கள், யார் சொல்லிக் கொடுத்ததைப் பேசுவார்கள் என்பதை, மொத வாக்கியத்திலேயே புரிந்து கொள்பவன் நான்” என்று கொதித்து விட்டாராம் கருணாநிதி.
அதற்குப் பிறகு, ஸ்டாலினுக்கும் கருணாநிதிக்கும் இடையே பேச்சுவார்த்தை பெரிதாக இல்லை என்கிறார்கள். இருவரும் வெவ்வேறு துருவங்களாக அரசியல் செய்யத் தொடங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
இந்த நிலைப்பாடு அழகிரி தரப்புக்கும், கனிமொழி தரப்புக்கும் திருப்தியைக் கொடுத்தாலும், ஸ்டாலின் வேறு ஏதாவது பிளான் பண்ணி தலைமையைக் கைப்பற்றி விடக்கூடும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது.
அதற்கு ஏற்றா மாதிரித்தான் ஸ்டாலினின் சமீபகால நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.
தி.மு.க.வின் ‘தூண்கள்’ எல்லாம் வரிசையாக போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்லத் தொடங்கியுள்ள நிலையில், வெளியே கட்சி வேலைகளைக் கவனிக்கும் ஒரேயொரு ஆக்டிவ்வான தலைவராக ஸ்டாலின்தான் வளைய வருகிறார். ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார். அதிரடிக் கருத்துக்களை அள்ளி வீசுகிறார். அ.தி.மு.க. அரசுக்கு சவால் விடுகிறார்.
கோவை சிறைக்குச் சென்று வீரபாண்டியாரையும் மற்றையவர்களையும் பார்த்துவிட்டு வருகிறார். பாளையங்கோட்டை சிறைக்குச் சென்று பூண்டி கலைவாணனை சந்திக்கிறார். ஊர் ஊராகச் சுற்றுப் பயணம் செய்கிறார். தொண்டர்களைச் சந்திக்கிறார். ஆர்ப்பாட்டங்களில் கைதாகும்போது, தொண்டர்கள் அனைவரும் பத்திரமாக போலீஸ் வேனில் ஏறும்வரை தானும் வெளியே காத்திருக்கிறார்.
ஸ்டாலினின் இந்த சமீபகால நடவடிக்கைகள் கட்சித் தொண்டர்களிடையே அவரது இமேஜை பூஸ்ட் பண்ணியிருப்பது உண்மை.
அழகிரியோ, தனது நெருங்கிய சகாக்கள் ஒவ்வொருவராக போலீஸின் பிடிக்குள் போவதைத் திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். எந்த நிமிடமும் தனது வீட்டுக் கதவை போலீஸ் வந்து தட்டலாம் என்ற பயத்தில், மதுரைப் பக்கத்தில் அதிகம் தலைகாட்டாமல் டில்லியிலேயே அதிகம் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
கனிமொழி, கட்சிக்காரர்களுடன் தொடர்பற்ற நிலையில் திகார் சிறையில் இருக்கிறார்.
இந்த நிலையில், அழகிரியும் கனிமொழியும் குடும்பத்துக்குள் ஆதரவைப் பெற்றாலும், கட்சிக்குள் ஸ்டாலினின் கைதான் ஓங்கியிருக்கின்றது.
-சென்னையிலிருந்து கலியபெருமாளின் குறிப்புகளுடன், ரிஷி.
Tuesday, August 16, 2011
ஸ்டாலின் அதிரடி: “குடும்பத்துக்குள் எனக்கே சீன் காட்டுகிறீர்களா?”
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment