Thursday, August 11, 2011

கார்களின் மகாராஜா!

1925 வருட கார் உலகின் ராஜா என்றழைக்கப்படும் ரோல்ஸ் ராய்க்கே கார் ஒன்று ஆகஸ்ட் 2011இல் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏலம் விடப்பட இருக்கிறது. இதன் விலை ஏழரை லட்சம் முதல் பத்து லட்சம் அமெரிக்க டாலர் வரை போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரூபாயில் மூணரை முதல் நாலரை கோடி. இது ரோல்ஸ் ராய்க்கே ஃபேண்டம் டார்பெடா டூரர் வகை கார். இதன் சிறப்பம்சம் 1925இல் ராஜஸ்தானிலுள்ள கோடா எனும் நகரில் வாழ்ந்த உமெத் சிங்க் - II என்ற மகாராஜாதான் இந்த காரை ஓட்டிக் களித்திருக்கிறார். இந்த காரோட பட்டப் பெயர் ‘கார் புலி’. 80 வருடம் அசராமல் ஓடும் இந்த காருக்கு அந்தப் பெயர் வெகு பொருத்தம்தானே? உயர்தர ஆறு சிலிண்டர் எட்டு லிட்டர் இன்ஜின் கொண்டது. மகா ராஜாக்களுக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப் பட்ட காராம் நம்ம புலி.

இந்தக் குறிப்பிட்ட காரை பார்க்கர் அண்ட் கம்பெனிதான் வடிவமைத்தது. விளையாட்டு, வேட்டைகளுக்குத் தகுந்தவாறு காரின் முன்பக்கம் முக்கோண வடிவில் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பணம் வைப்பதற்கென்று ரகசிய டப்பாக்களும் இதில் இருக்கு. பறவைகள், புலி இவற்றை வேட்டையாடுவதற்குத் தேவையான துப்பாக்கி, சிறு துப்பாக்கி ஆகியவற்றை வைக்கத் தகுந்த இடங்களும் பிரத்யேகமாகக் கொண்டிருக்கிறது இந்த கார்.

முதலில் ராஜஸ்தான் மகாராஜாவிடமிருந்தது, அதற்கு அப்புறம் இங்கிலாந்து கலெக்டர் இதை வைத்திருந்தார், அதன் பின் 1960களில் அமெரிக்கர் ஒருவர் ஓட்டியிருக்கிறார். இப்பொழுது இதை அமெரிக்காவில் ஸ்விக் என்பவர் வைத்திருக்கிறார்.

இந்தியா தூதரகம் இந்த காரை இந்தியாவுக்குத் திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டதாம். இந்த மாதிரி மகாராஜா ஓட்டிய கார்கள் பல இந்த உலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றனவாம். ஆனால் இதுவரை எந்த மகாராஜா காரும் திருப்பித் தரப்பட்டதே இல்லை என்று புள்ளி விவரம் தருகிறார் ஸ்விக்.

இந்தியா ஒரு காலத்தில் பணக்கார நாடு. எங்கள் ஊர் பத்மநாப ஸ்வாமி கோயில் பற்றிய செய்தியைப் படிச்சிருப்பீங்களே? இந்த மாதிரி கோஹினூர் வைரமும் இந்தியாவைத்தான் சேர்ந்தது. அது இப்பொழுது இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் உறங்குகிறது என்று படித்த ஞாபகம். எல்லாம் நம்ம நேரங்க! கூடிய சீக்கிரம் பழையபடி இந்தியா பணக்கார நாடா மாறிடும். அப்புறம் வச்சுக்கலாம் இவங்களை? என்ன சொல்றீங்க?

No comments: