Monday, August 8, 2011

ஏ.சி. தந்த ஓசிப் பாடம்!

ஒரு சகோதர வாசகி உடைய அனுபவங்கள்.........

‘வெயில் தாங்க முடியவில்லை’ என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பே பெட்ரூமில் விண்டோ ஏ.சி. போட்டிருக்கிறோம். இப்போது ஹாலில் ஏ.சி. போட்டால் யாராவது வந்தால் படுக்க, பகல் பொழுதில் உட்கார வசதியாக இருக்கும் என்று என் கணவர் சொல்லிக் கொண்டே இருந்தார். அந்தச் சமயம் பார்த்து இலவசமாக சூட்கேஸ் தருவதாக டி.வி.யில் ஓர் ஏ.சி. நிறுவனம் விளம்பரம் வந்ததும், உடனே அந்தக் கம்பெனிக்கு சொல்லி ஏ.சி. வாங்கியாகிவிட்டது. ஹால் பெரியது என்பதால் இரண்டு டன் ஸ்பிளிட் ஏ.சி.தான் சரியாக இருக்குமென்று என் கணவரின் தம்பி சொன்னார். நாங்களும் அதற்கே ஆர்டர் கொடுத்து, வரவழைத்துவிட்டோம்.

நாங்கள் எல்லா இடத்திலும் பார்த்திருக்கிறோமே தவிர அதன் விசேஷ இணைப்புப் பற்றி ஏதும் தெரியாது. பக்கத்து வீட்டில் எல்லாம் ஸன்ஷேடிலேயே பொருத்தியிருக்கிறார்கள். அது போல் நம் வீட்டிலும் பால்கனியில் வைத்து விடலாமென்று பார்த்தால் மிஷன் மிகப் பிரம்மாண்டம். மேலே ஸிலீங்கில் இடிக்கும் அளவு இருந்தது. சரி மாடியில் வைக்கலாமென்றால் ஏ.சி. போடும் மெகானிக் அங்கேயிருந்து செப்புக் குழாய் போட்டு கொண்டு வந்து கனெக்ஷன் கொடுக்க மேலும் ஐயாயிரம் ரூபாய் ஆகுமென்று சொல்லிவிட்டார். வேறு எங்கு வைக்கலாமென்று யோசித்து கடைசியில் பக்கத்து ரூமில் தண்ணீர் வைப்பதற்காக ஒரு மேடை போட்டிருந்தோம். அதற்கு நேரே ஜன்னல் இருக்கிறது. பக்கத்தில் பால்கனி க்ரில். அதன் வழியே வெப்பம் வெளியே போய்விடுமென்று அங்கேயே மேடையில் வைத்துவிட்டார் அதன்பிறகு தான் தெரிந் தது அந்த அறையை உபயோகப்படுத்தமுடியாமல் அக்னிகுண்டம் போல் தகிக்கும் என்று.

இமயமலைக்கு மானஸரோர் யாத்திரை போய் வருபவர்கள் சொல்வார்கள், அவ் வளவு குளிர்ந்த இடத்தில் பக்கத்திலேயே ஒரு வெந்நீர் ஊற்று பொங்கப் பொங்க வெந்நீர் வருமென்று. அதை நாங்கள் எங்கள் வீட்டிலேயே அனுபவித்தோம். என் கணவரின் தம்பிக்கு ஏ.சி. போட்ட விவரத்தை ஃபோன் செய்ததும் அவர் அந்த கடைக்காரரிடம் கோபித்துக்கொண்டார். மறுநாள் கம்பெனி ஆட்கள் வந்து மாடியில் வைத்து சரி செய்து விட்டுப் போனார்கள். ஒரு நான்கு நாட்கள் நன்றாக இருந்தது. ஐந்தாம் நாள் வந்தது அனர்த்தம். கூலிங் மெஷினிலிருந்து தண்ணீர் ஹாலில் கொட்டி ஆறாக ஓடியது. சுவரில் மாட்டி இருந்த காலெண்டரெல்லாம் ஈரம். இதென்னடா வம்பு என்று திரும்பவும் ஃபோன் செய்தோம். மெகானிக் வந்து தண்ணீர் போகும் குழாய் எங்காவது மடிந்துக்கொண்டிருக்குமென்று கூறி சரி செய்து விட்டுப் போனார். தற்போது சரியாக சுகமாக இருக்கிறது.

நாம் ஒரு பொருள் புதியதாக வாங்கினால் அதைப்பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டு, சுய கௌரவம் பாராமல், ஆயிரம் கேள்விகள் கேட்டு பொறுமையாகச் செய்ய வேண்டுமென்று பாடம் கற்றுக் கொண்டோம்.

பின்குறிப்பு: அந்த இலவச சூட்கேஸ் கடைசிவரை வரவேயில்லை!

- கோவி, சென்னை

No comments: