Monday, August 22, 2011

சாக்ஸுக்காகவும் சன் நிறுவனத்துக்காகவும் இன்று திரையுலகில் பரிதாபப்பட யாருமில்லை என்பதுதான் உண்மை நிலை.

விஷால் நடித்த படம் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’. இதன் தயாரிப்பாளர் அவரது சகோதரர் விக்ரம் கிருஷ்ணா. படம் முடிந்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. தமிழ் நாடு உரிமை ஆறு கோடி," என்றார் விக்ரம். எங்களுக்கு தமிழ்நாடு முழு உரிமை வேண்டாம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் தவிர மற்ற ஏரியாவுக்கு ரேட் சொல்லுங்க," என்றார் சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ‘சாக்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா. அப்ப நாலு கோடி கொடுங்க," என்றார் விக்ரம். நான்கு கோடியில் அட்வான்ஸ் கை மாறியது. ஆனால், சென்னை ஏரியாவில் படத்தை யாருக்கும் விற்காத நிலையில் 40 தியேட்டர்களில் ரிலீஸ் என்ற விளம்பரம் வந்தது. அதிர்ந்து போய்விட்டார் விக்ரம். நீங்க எப்படி இந்த ஏரியாவில் ரிலீஸ் செய்யலாம்," என்று கேட்க, ஏய் மிஸ்டர்... இந்தா உன் படம். இந்த ஏரியாவில் வசூல் செய்த நாற்பது லட்சம். எடுத்துக் கொண்டு போ. ஏதாவது மேலே பேசினால் அவ்வளவுதான்," என்று மிரட்டப்பட்டார் விக்ரம். அதிகாரத்திலிருந்த பலரிடம் முட்டி மோதியதில் எந்தப் பலனுமில்லை.

இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்தான். இதுபோல் குறைந்தது 50 வயிற்றெரிச்சல் கதைகளைச் சொல்கிறது தமிழ்த் திரைப்பட உலகம். உதாரணத்துக்குச் சில:

தயாரிப்பாளர்களையும் தியேட்டர் அதிபர்களையும் ஏமாற்ற, பல யுக்திகளைக் கடைப்பிடித்தார். ‘சினிமா உலகம்’ கறுப்பு - வெள்ளை பரிமாற்றத்தில் இருப்பதால் இவரது யுக்திகள் சுலபத்தில் செயல்பட்டன. படத்துக்குப் பேசிய தொகை 1 கோடி என்றால் கணக்கில் காட்டப்படுவது 50 லட்சமாகத்தான் இருக்கும். கறுப்பு அல்லது வெள்ளையில் பேசிய ஒரு தொகையைக் கொடுக்காமல் இழுத்தடிப்பதும், சில வேளைகளில், அதிகார பலம் காரணமாகக் கொடுக்காமலேயே இருப்பதும் நடந்திருக்கிறது. சில சமயங்களில் படம் நன்றாக ஓடினாலும் ‘வசூலே கிடையாது. ஊத்திக்கிச்சு... நீ தான் பணம் கொடுக்கணும்’ என்று மிரட்டப்பட்ட சம்பவங்களும் உண்டு.

ஒரு படத்தை வாங்குவது என்று சாக்ஸ் தீர்மானித்துவிட்டால் ‘தாங்கள் வாங்கப் போவதாக’ச் செய்தியைக் கசிய விடுவார்கள். வேறு எந்த விநியோகஸ்தரும் தலையிட மாட்டார். இறுதியில் ஒரு விலை கொடுத்து ‘சன்’ வாங்கிவிடும். இந்த அஜால்குஜால் வேலைக்கு அடிபணிந்து வெறுத்துப் போனது ஒரு பிரபல மூன்றெழுத்துப் பட நிறுவனம். ஆட்சி மாறிய பின்தான் இப்போது மீண்டும் படத் தயாரிப்புக்குத் திரும்பியிருக்கிறது.

தங்களுக்கு யாராவது படத்தை விற்காவிட்டால் தங்கள் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் விமர்சனம் என்ற பெயரில் நார் நாராய்க் கிழித்துத் தொங்கப் போடுவார்கள். ரிலீஸ் செய்ய தியேட்டர் கிடைக்காது. சன் குழுமத்தின் ஆசி, ஆதரவுடன் சாக்ஸால் இதையெல்லாம் நிகழ்த்த முடிந்தது.இப்படிப் பல சோதனைகளைச் சந்திக்க நேரிடும். ‘முற்பகல் செய்யின்’ கதைபோல இன்று புழலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் சாக்ஸ்.

சாக்ஸ் குடும்பம் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டது. இவரது பெற்றோர் பர்மாவிலிருந்து அகதிகளாக ஓடி வந்தவர்களாம். அப்பா தர்மராஜ், லிப்டன் தேயிலை நிறுவனத்தில் பணியாற்றினாராம். சாக்ஸின் ஒரிஜினல் பெயர் வெங்கடேஷ். ஒரு ஸ்டைலுக்காக இப்போது அழைக்கப்படும் பெயருக்கு மாறியிருக்கிறார். ஆனால், இவர் தந்தையுடன் இப்போது சரியான பேச்சு வார்த்தையில்லையாம். ‘பெத்த மனம் பித்து’ என்ற நிலையில் நீதிமன்றத்துக்கு மகனைப் பார்க்க வந்த தந்தையைத் திட்டி அனுப்பிவிட்டாராம் சாக்ஸ்.

பட விஷயங்களிலும் சரி, தனிப்பட்ட விஷயங்களிலும் சரி, தம்முடன் யார் தகராறு செய்தாலும், அடி, உதை என்று களத்தில் இறங்க குண்டர் படை ஒன்று தயாராக வைத்திருந்தாராம். தம்முடன் தகராறு செய்த ஒரு ஓட்டல் அதிபர் மகனை பழிவாங்கும் நோக்கில் அண்ணா சாலையில் அவரது ஓட்டலை அடித்து துவம்சம் செய்தது இவரது குண்டர் படை. வெளியே வராத அட்டகாசங்கள் பல உண்டு.

லயோலா கல்லூரியில் கலாநிதி மாறனுடன் ஏற்பட்ட நெருக்கம் இன்றுவரை தொடர்கிறது. சாக்ஸை அம்போவென்று கலாநிதியால் இப்போது கைவிட முடியாது. அப்படி விட்டால் கலாநிதியை அவர் மாட்டிவிட்டு விடக்கூடும். எனவே சாக்ஸை ஜாமீனில் கொண்டு வரும் முயற்சி நடக்கிறது. புகார் கொடுத்தவர்களிடம் செட்டில்மெண்ட் நடக்கிறது. ஏற்கெனவே புகார் கொடுத்த ஐந்து பேர் வாபஸ் வாங்கி விட்டார்கள். ஆனால், தினம் ஒரு புகாரில் மறு கைது செய்யப்படுகிறார் சக்ஸேனா. பட சம்பந்தமான கேஸ் தவிர நில அபகரிப்பிலும் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

‘எந்திரன்’ விவகாரத்தில் நஷ்டப்பட்டுப் போன தியேட்டர்களுக்கு 35 கோடி செட்டில் செய்திருக்கிறார்கள். புகார் கொடுத்த செல்வராஜ் என்பவர் வீட்டில் மத்திய அரசின் வருமான வரித்துறை ரெய்ட் நடத்தியது. தமது செல்வாக்கால் புகார் கொடுத்தவர்களை இப்படியும் பயமுறுத்துகிறது சன். தமிழக அரசு வழக்குகளை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி விட்டது. சாக்ஸுக்காகவும் சன் நிறுவனத்துக்காகவும் இன்று திரையுலகில் பரிதாபப்பட யாருமில்லை என்பதுதான் உண்மை நிலை. இதற்கிடையில் கலாநிதிக்கு எதிராக ஒரு வாக்குமூலத்தை வாங்க சி.பி.சி.ஐ. முயன்று வருகிறது.

No comments: