இது ஒரு அமெரிக்காவில் உள்ள ஒரு நண்பர் எழுதிய பதிவு
=====================================================================================
அமெரிக்கக் கனவான்கள் மீண்டும் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு முந்தைய இரு ரிசசன்களிலும் (2001. 2008) ஆப்பு வாங்கி, வேலையை இழந்தவன் என்பதால், இப்போதைய நடப்புகளை உற்று கவனித்து வருகிறேன்.
2007ல் பங்குச்சந்தை பல புதிய உச்சங்களைப் பெற்று மேல்நோக்கிச் சென்றுகொண்டே இருந்தது. அப்போது மெதுவாக நிதி நிறுவனங்களில் பண நெருக்கடி, கொடுத்த கடன் திரும்பவில்லை என்று முணுமுணுத்தார்கள். தொடர்ந்து வேலையிழப்பு விகிதம் அதிகரிக்கிறதே என்று சில பொருளாதார பத்தி எழுத்தாளர்கள் புருவம் சுருக்கினர். ’நாம் ஒருவேளை ரிசசனை நெருங்கிக்கொண்டிருக்கிறோமோ..ச்சே..ச்சே..இருக்காது. நாம் இருப்பது வலிமையான அமெரிக்கா ஆச்சே’ என்று மெதுவாக விஷயத்தை ஓப்பன் செய்தனர். அடுத்து 2008 ஜனவரியில் ஸ்டாக் மார்க்கெட்டில் அடி விழுந்ததும் ‘வந்தாச்சு..வந்தாச்சு..ரிசசன் வந்தாச்சு..இப்போ என்ன செய்யணும்னா..’ என்று அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார்கள்.
இப்போது நம் கவலையெல்லாம், அதே வரிசையில் விஷயங்கள் நடக்கத் தொடங்கியிருப்பது தான். பேங்குகள் மூடப்படும் விகிதம் 9% அதிகரித்திருப்பதாக ஒரு அறிக்கை சொல்கிறது. வேலையிழப்பு விகிதம் சென்ற மாதத்தை விட 66% அதிகரித்திருப்பதாக மற்றொரு செய்தி சொல்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தின் மிக நெருக்கடியான காலகட்டம் என்று பொருளாதார வல்லுநர்கள் அலறுகிறார்கள்.
இந்த பொருளாதார மேதைகளும், கம்பெனிகளும் வெளியில் சொல்லாத விஷயம் ஒன்று உண்டு. 2008ல் ஆரம்பித்த ரிசசன் 2010ல் முடிந்ததாக வெளியில் சொல்லப்பட்டாலும் அது உண்மை அல்ல. அதன் தொடர்ச்சியே இப்போது நாம் காண்பது. (அதற்கு உதாரணமாக சிங்கப்பூரில் இன்றும் சூடு பிடிக்காத, வங்கி நிதி பெருமளவில் தேவைப்படும் ஷிப் பில்டிங் பிசினஸ்) அப்போது ரிசசன் பிரச்சினையை அணைக்க கரன்சியை பிரிண்ட் செய்து அப்போதைக்கு விஷயத்தை மூடியது அமெரிக்கா. அப்போதே பலரும் ‘இது சரியான வழி அல்ல’ என்று சொன்னார்கள். ஆனாலும் அப்போது அமெரிக்காவிற்கு வேறு வழியில்லை. அதன்பிறகு அதை மறந்து போனார்கள். அவர்களுக்கு என்ன தான் பிரச்சினை?
அதற்கு அண்ணன் ரொனால்டு ரீகன் காட்டிய வழியே அடிப்படைக் காரணம். ’ஒரு நாடு எவ்வளவு கரன்சியை அச்சிடுகிறதோ, அதற்கு இணையான தங்கத்தை தன் ரிசர்வ் பேங்கில் ஈடாக வைத்திருக்க வேண்டும்’ என்ற கரன்சி மதிப்பை நிர்ணயிக்கும் பொதுவிதியை ரீகன் தூக்கிக்கடாசினார். தேவைப்படும்போது செனட் ஒப்புதலுடன் பிரிண்ட் செய்துகொள்ளலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்தார். . இதன் மூலம் ஏராளமான ’பேப்பர்’ கரன்சி பல வருடங்களாக பிரிண்ட் செய்யப்பட்டது.
தன் நாட்டாமைத்தனத்தால் பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்குவதற்கான பொது கரன்சியாக டாலரை முன்னிறுத்தியது அமெரிக்கா. அந்த வகையில் வெறும் பேப்பரை எல்லா நாடுகளுக்கும் கரன்சி என்ற பெயரில் ஏற்றுமதி செய்தது. இப்போது இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் அந்த பேப்பரை கோடிக்கணக்கில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. அதை அமெரிக்காவிடம் திரும்பக் கொடுத்து, அதற்கு ஈடான தங்கள் கரன்சியை கேட்டாலே போதும், நம் நிதிநிறுவன அதிபர்கள் போல் அமெரிக்கா ஓட வேண்டியிருக்கும்.
உற்பத்தித்துறை சுத்தமாக வீழ்ந்து போன நிலையில், ;நாடு முன்னேற செலவளி’ என்ற மந்திரத்துடன் அமெரிக்கப் பொருஆதாரம் தள்ளாடி நடைபோடுகிறது. கொஞ்ச வருடங்களுக்கு ஒருமுறை பணத்தட்டுப்பாடு வருவதும், அச்சடித்து அதை சமாளிப்பதுமாக ஓட்டிய அமெரிக்கா, இப்போது நெருக்கடியின் உச்சத்தை எட்டியிருப்பதாகவே தெரிகின்றது. மீண்டும் அச்சடிக்க செனட் ஒப்புதல் வாங்கியாகிவிட்டது. ’ஆனால் இப்படியே எத்தனை நாள்?’ என்ற பயமே இப்போது அனைவரையும் பிடித்து ஆட்டுகிறது.
தற்போதைய நிலையில் தொழில் துறையில் அடுத்து என்ன நடக்கும் என்பது நாம் அறிந்ததே..நம் கம்பெனியை தூக்கி நிறுத்துவதற்கென்றே இருக்கும் மேனேஜ்மெண்ட் புண்ணியவான்கள் எப்படியெல்லாம் இதை உபயோகித்து லாபத்தை கூட்டலாம் என்று பார்ப்பார்கள். போனஸ், இன்க்ரிமெண்ட் பற்றி பேசவே மாட்டார்கள். ஒருத்தன் தலையில் மூன்று ஆள் வேலையை ஏற்றி, புதிதாக ஆள் எடுப்பதை தவிர்ப்பார்கள். இதுவரை கம்பெனி லாபத்தில் இயங்குவதையும், அதனால் சேர்ந்துள்ள உபரிநிதி பற்றியும் பேசுவதை விடுத்து, ‘கம்பெனியைக் காப்பாற்ற நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்று சொல்லி மேலும் கசக்கிப் பிழிய எல்லா ஏற்பாடுகளையும் செய்வார்கள். நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பதை இறுக்கினால், அவற்றைச் சார்ந்த புராஜக்ட்கள் நிறுத்தப்படும். தொடர்ந்து ஐடி போன்ற சேவைத் துறைகளும் அடி வாங்கும்.
பொதுவாக எங்கள் துறையில் 3டி மாடல் செய்ய ஒருவர், அதில் இருந்து 2டி டிராயிங்(ஐஸோ) எடுக்க இன்னொருவர். அதில் ஸ்ட்ரெஸ் அனலிஸ் செய்ய இன்னொருவர். எல்லாவற்றையும் செக் பண்ண குவாலிட்டி ஆள்/எஞ்சினியர் ஒருவர் என்றே இருப்பர். ஆனால் சென்ற 2008 ரிசசனை அடுத்து வேலை தேடியபோது, அனைத்துக் கம்பெனிகளும் சொல்லி வைத்தாற்போல் மேற்சொன்ன நான்கு வேலையும் தெரியுமா என்று கேட்டு விரட்டி அடித்தார்கள்.
இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது நம் வேலையை மட்டுமல்லாது பிறரது வேலைகளையும் தெரிந்து வைத்துக்கொள்வதும் நம் தகுதியை மேலும் வளர்த்துக் கொள்வதுமே. அதுவே நம்மை இனிவரும் காலங்களில் காப்பாற்றும். ‘இது என் வேலையல்ல’ என்று எதையும் ஒதுக்காமல் அதையும் தெரிந்து கொள்வோம்!
மேலும், பாஸ்-ஐ கொஞ்சநாளைக்கு முறைக்காமல் குத்து மார்னிங் சொல்வதும் நலம் பயக்கும்!
Friday, August 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment