லாங்க்லி, அமெரிக்கா:
உளவுத்துறைகளின் ரகசிய ஆபரேஷன்களை நடாத்திக் கொடுத்தவர்கள் பற்றிய தகவல்கள் பொதுவாக வெளியிடப்படுவதில்லை. ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். இந்த விஷயத்தில் ஒரு சிறிய கம்ப்ரமைஸ் செய்திருக்கிறது சி.ஐ.ஏ.
பின்லேடன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவர் கொல்லப்படக் காரணமாக இருந்தவர் பற்றிய சில விபரங்கள் வெளியிடப்படுவதை, சி.ஐ.ஏ. அனுமதித்திருக்கிறது. இவர், அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளருடன் ஒரு சந்திப்பை நடாத்தியிருக்கிறார்.
இவரை அடையாளப்படுத்த, ‘ஜோன்’ என்ற ஒற்றைப் பெயரை மாத்திரம் வெளியிட அசோசியேட்டட் பிரஸ் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர, இவரது வேறு அடையாளங்களையோ, உருவ அமைப்பைப் பற்றியோ வெளியே சொல்வதில்லை என உறுதிமொழி வாங்கப்பட்டுள்ளது.
இவரது அடையாளம் வெளியானால், பின்லேடனின் மரணத்துக்குக் காரணமாக இருந்த இவர், அல்-காய்தாவினரால் இலக்கு வைக்கப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையே இதற்குக் காரணம்.
பின்லேடனின் மறைவிடம், ஜோன் தலைமையிலான குழு ஒன்றாலேயே கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அந்த இடத்தை ரெய்ட் செய்து அவரைக் கொல்லும் திட்டமிடலும் இவரால் செய்யப்பட்டிருக்கின்றது.
பின்லேடனின் மறைவிடத்தில் கமான்டோக்கள் அதிரடியாகப் போய் இறங்கிய நிமிடத்திலிருந்து அங்கு நடைபெற்ற அனைத்தும் நேரடியான வெள்ளை மாளிகைக்கு ஒளிபரப்புச் செய்யப்பட்டன. ஜனாதிபதி ஒபாமாவும், வேறு சில உயர்மட்ட அதிகாரிகளும் வெள்ளை மாளிகையிலிருந்து அந்தக் காட்சிகளைப் பார்வையிட்டனர்.
அப்போது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று, வெள்ளை மாளிகை அதிகாரிகளால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்த போட்டோ எடுக்கப்பட்டபோது, அதன் பிரேமுக்கு வெளியே நின்றிருந்தார் ஜோன்!
குறிப்பிட்ட அந்த போட்டோ எடுக்கப்பட்ட போது, ஜோன் அந்த அறைக்குள் இருந்திருக்கிறார். தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட மறைவிடத்தில் பின்லேடன் கொல்லப்படுவதை அவரும் பார்வையிட்டிருக்கிறார். ஆனால், வெளியிடப்பட்ட போட்டோவில் அவர் இல்லை.
போட்டோ எடுக்கப்பட்டபோது, அதன் பிரேமுக்கு வெளியே அவர் நின்றுகொண்டார்.
பின்லேடனின் இருப்பிடம் பற்றிய உறுதியான உளவுத் தகவல்கள் கிடைத்திருப்பதாக ஜோன், எழுத்து மூலமாக அறிக்கை கொடுத்தது, கடந்த வருட கோடைகாலத்தில்! அதற்குமுன் கிட்டத்தட்ட 10 வருடங்களாக, சி.ஐ.ஏ.யில் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை, பின் லேடனின் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்வதுதான்!
பின்லேடனின் மறைவிடம் பற்றிய தகவல் கிடைத்த பின்னரும், அதை உறுதிப்படுத்த கிட்டத்தட்ட 8 மாதங்கள் எடுத்தது. இந்த 8 மாத காலப்பகுதியில் அந்த இடம் பற்றிய முழுமையான தகவல்களும் ஜோனின் கைகளுக்கு வந்து சேர்ந்திருந்தன. அதன்பின் திட்டமிடப்பட்டு, ரெயிட் நடாத்தப்பட்டது.
சி.ஐ.ஏ.யில் பின்லேடன் வேட்டை புரொஜெக்டில் ஜோன் ஈடுபட்டிருந்த 10 வருடங்களில் அவர், தனக்குக் கொடுக்கப்பட்ட பதவி உயர்வை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். பின்லேடனைப் பிடித்த பின்னர்தான் பதவி உயர்வு என்று பிடிவாதமாக, அதே பதவியில் தொடர்ந்திருக்கிறார்.
10 வருடங்களாக தன்னைப் பற்றிய விபரங்களை, ‘ஜோன்’ என்ற பெயருடைய ஒருவர் சேகரித்துக் கொண்டிருக்கிறார் என்ற விஷயம் பின்லேடனுக்கு, அவர் இறக்கும்வரை தெரிந்திருக்காது.
Thursday, August 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment