1980ன் பிற்பகுதியில் கோவைத் தெருக்களில் கூவிக் கூவி லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த ஒருவர், அடுத்த பதினைந்து வருடங்களுக்குள் பல வட கிழக்கு மாநிலங்களில் யார் முதல்வராக வர வேண்டும் என்று தீர்மானிக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார் என்பதை உங்களால் நம்ப முடியுமா? அப்படி உயர்ந்தவர்தான் இப்போது நில அபகரிப்பு வழக்கில் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் ‘லாட்டரி கிங்’ என்றழைக்கப்படும் சாந்தியா மார்ட்டின். ‘தவறான வழியில் சேர்த்த செல்வம் ஒருநாள் கவிழ்த்து விடும்’ என்று உண்மையை இப்போதாவது மார்ட்டின் புரிந்துகொண்டிருப்பார் என்கிறார்கள் அவரால் பழிவாங்கப்பட்ட தொழில் எதிரிகள்.
லாட்டரி என்பது மார்ட்டின் குடும்பத் தொழில் என்றுகூடச் சொல்லலாம். அவரது பெற்றோர் பர்மாவில் லாட்டரி பிஸினஸ் செய்து கொண்டிருந்தவர்கள். பின்னர் உள்நாட்டுக் குழப்பத்தால் அங்கிருந்து ஓடிவந்து அருணாசல பிரதேசத்தில் செட்டில் ஆனவர்கள். இப்படித்தான் வடகிழக்கு மாநிலங்களோடு மார்ட்டினுக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் கோவையில் வந்து தமது லாட்டரி பிஸினஸைத் தொடர்ந்தார் மார்ட்டின். அவருக்கு வலது, இடது கையாக விளங்கியவர் அவரது மைத்துனர் ஜான் பிரிட்டோ. அருணாசல பிரதேஷ், சிக்கிம், பூடான், நாகாலாந்து மாநிலங்கள் லாட்டரி நடத்த முடிவு செய்தபோது, முழு விற்பனை உரிமை பெற்றதிலிருந்துதான் மார்ட்டினுக்கு வசூல் வேட்டை.
அந்த மாநிலங்கள் குறிப்பிட்ட தொகைக்கு டிக்கெட்டுகளை அச்சடித்து, கமிஷனைக் கழித்துக்கொண்டு மார்ட்டின் கையில் கொடுத்துவிடும். அவர் இந்தியா முழுவதும் விநியோகிப்பார். இங்கேதான் தில்லுமுல்லு. அந்த அரசாங்கங்கள் அடித்த லாட்டரி சீட்டுகளைத் தவிர கோடிக்கணக்கில் கள்ள லாட்டரி டிக்கெட்டுகள் அச்சடிக்கப்படும். அப்படி விற்கப்பட்ட கள்ள டிக்கெட்டுகள் மூலம் புரண்டன கோடிகள். பின்னர் ஒரு கட்டத்தில், சில மாநிலங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு லாட்டரி டிக்கெட்டை அச்சடித்து விநியோகிக்கும் பொறுப்பைத் தனியாருக்கு காண்ட்ராக்ட் கொடுத்தவுடன், கணக்கு வழக்கு இல்லாமல் சகட்டுமேனிக்கு அச்சடித்து, விற்று பணத்தைக் குவித்தார்கள்.
சில மாநிலங்களில் தினக் குலுக்கல் நடந்தபோது விற்காத டிக்கெட்டுகளின் பட்டியலை உடனுக்குடன் பெற்று, அந்த டிக்கெட்டுகளுக்குப் பரிசு விழுந்ததாக அறிவித்து விடுவார்கள். இந்த கோல்மால்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகளும் உடந்தை. எனவே தான் யார் முதல்வராக வர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் வகையில் ஒவ்வொரு தேர்தலிலும் கோடிக்கணக்கில் செலவழிப்பார் (முதலீடு?). ஒரு கட்டத்தில் மார்ட்டினுக்கு குவிந்த பணத்தை எண்ணுவதற்கென்று 40 பெண்களை வேலைக்கு வைத்திருந்தார்களாம்!
தமிழ்நாட்டில் 2003ஆம் வருடம் லாட்டரிக்குத் தடை போடப்பட்டது. 2006ஆம் ஆண்டு ஜெ. ஆட்சியில் இருந்தவரை மார்ட்டின் போன்றவர்கள் எவ்வளவோ முயன்றும் தடை நீக்கப்படவில்லை. ஆனால், உள்ளூர் காவல் துறையின் உதவியுடன், கள்ளத்தனமாக லாட்டரி விற்பனை நடந்து கொண்டிருந்தது. சேர்த்த பணத்தில் கோவை, சென்னை என்று பல நகரங்களில் சொத்துகளை வாங்கிக் குவித்தார். ஒரு சேனலைத் தொடங்கி விட்டார்.
கருணாநிதி லாட்டரித் தடையை நீக்காவிட்டாலும் லாட்டரி அதிபரான மார்ட்டினுக்கு மறுவாழ்வு கொடுத்தார் என்று சொல்லலாம். கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் ‘இளைஞன்’ படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு மார்ட்டினுக்குக் கிடைத்தது. எந்தத் தமிழ் சினிமா கதாசிரியரும் கருணாநிதியைப் போல ஐம்பது லட்சம் சம்பளமாகப் பெற்றிருக்க மாட்டார்கள். ஆளும் குடும்பம் மார்ட்டின் சொல்படி கேட்டது. மதுரைத் தளபதியின் மனைவிக்கு இவர் வாங்கிக் கொடுத்த சொத்து இப்போது வில்லங்கமாகி இப்போது அவரையும் வழக்கில் பின்ன வைக்க, காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
எந்தக் கட்சித் தலைவரையும் பணத்தால் வளைக்கக் கூடியவர் மார்ட்டின். கேரள மாநிலத்தில் லாட்டரி விவகாரத்தில் ஆதாயம் பெற மார்க்சிஸ்ட் கட்சியின் பத்திரிகையான தேசாபிமானிக்கு இரண்டுகோடி நன்கொடை கொடுத்தார். இவருக்காக கேரளாவுக்கு வழக்காட வந்தவர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி. செம்மொழி மாநாட்டில் ஒரு கமிட்டியில் இடம் பிடித்துவிட்டார். தி.மு.க. ஆட்சியில் இவர் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் குப்பைத் தொட்டிக்குப் போயின. மாறாக யாரை பழி வாங்க வேண்டும் என்று இவர் நினைத்தாரோ அவர்கள் பொய்ப் புகார்களில் பழிவாங்கப்பட்டார்கள். அப்படிப் பழிவாங்கப்பட்டவர்களில் பத்திரிகை அதிபரும் ஒருவர்.
பொது மேடைகளில் அவ்வளவாக தலை காண்பிக்க மாட்டார் மார்ட்டின். இப்போதும் தம் பணம் தம்மைக் காப்பாற்றும் என்று அவர் நம்பி செயல்படுவதாகச் சொல்கிறார்கள். மார்ட்டின் பணம் எதுவரை பாயுமோ?
Monday, August 22, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment