Tuesday, August 16, 2011

தி.மு.க. ‘முதல் குடும்பத்தின்’ திரைமறைவு நபர், தந்திரமாக கைது!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவாகிய திரைப்படங்களின் தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்டுள்ளது, கருணாநிதியின் திரைப்படத்தைத் தயாரித்த காரணத்தால் அல்ல. அத்துடன் இவருக்கும், கருணாநிதிக்கும் இடையிலுள்ள தொடர்பு, வெறும் வசனகர்த்தா-தயாரிப்பாளர் உறவு மாத்திரமல்ல என்பதும் வெகு பிரசித்தம்.

கைது செய்யப்பட்டுள்ளவர், பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின். கடந்த தி.மு.க. ஆட்சியில் மிகச் செல்வாக்காக இருந்த நபர். தி.மு.க. ‘முதல் குடும்பத்துக்கு’ குறிப்பிட்ட சில அசையாச் சொத்துக்கள் சில இவரால் கிடைத்தவைதான் என்று பரவலாகவே கூறப்பட்டு வந்தது.

இவரைக் கைது செய்து விசாரித்தால், தி.மு.க. முதல் குடும்பத்தின் வில்லங்கமான சொத்துக்கள் சிலவற்றைப் பற்றிய விபரங்கள் கிடைக்கலாம் என்று போலீஸ் தரப்பில் நம்புகிறார்கள்.



போலீஸ், சி.பி.ஐ., வருமானவரி இலாகா விவகாரங்கள் எதுவுமே மார்ட்டினுக்கு புதிதல்ல. இவற்றில் ரிஸ்க் எடுப்பது, ரஸ்க் சாப்பிடுவதுபோல அவருக்கு.

ஆண்டுக்கு, ரூ7,200 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் இவர், ரூ2,112 கோடி வரி செலுத்தவில்லை என, வருமான வரித்துறை 2008ல், குற்றம் சாட்டியது. கேரளாவில், லாட்டரி டிக்கெட் விற்பனை தொடர்பாக, கடந்த 7ம் தேதி, மார்ட்டின் மீது, சி.பி.ஐ., நான்கு வழக்குகளை தொடுத்துள்ளது. ஏற்கனவே, திருவனந்தபுரம் போலீசார், இவர் மீது இரண்டு வழக்குகள் தொடுத்துள்ளனர்.


திருப்பூரில் இவர்மீது போடப்பட்ட வழக்கு ஒன்று தொடர்பாக, சமீபத்தில் திருப்பூர் கோர்ட்டில் சரணடைந்து, முன் ஜாமின் பெற்றுள்ளார். பூந்தமல்லியைச் சேர்ந்த ஒருவரது நிலம் அபகரித்தது தொடர்பான மற்றொரு புகாரில் இவர், சென்னை ஹைகோர்ட்டில் நிபந்தனை ஜாமின் பெற்று, நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.

இப்படி கோடிக்கணக்கில் தண்ணி காட்டி, திசைக்கு ஒன்றாக வழக்குகளை வைத்துள்ள மார்ட்டினை தற்போது மிகவும் சாதாரண கேஸ் ஒன்றில்தான் போலீஸ் கைது செய்துள்ளது. சேலத்தில் 49 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்தை மோசடி செய்து விற்பனை செய்த புகாரிலேயே மார்ட்டின் நேற்று சேலம் நில அபகரிப்பு மீட்புக்குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மார்ட்டின் கைது செய்யப்பட்டதை சேலம் போலீஸ் பெரியளவில் விளம்பரப் படுத்தவில்லை. கைது பற்றி லோக்கல் ஊடகங்களுக்குக்கூட தெரிவிக்கவில்லை. மார்ட்டினை கிட்டத்தட்ட ரகசியமாகவே கைது செய்துள்ளனர்.

இவர் கைது செய்யப்பட்டுள்ள விஷயம் வெளியே தெரிய வந்ததே, தற்செயலாகத்தான்! பூந்தமல்லி நில அபகரிப்பு கேஸில், நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்த மார்ட்டின், நேற்று கையெழுத்திட வரவில்லை. அவர் எங்கே என்று விசாரிக்கத் தொடங்கியபோதுதான், சேலம் போலீஸ் அவரைக் கைது செய்ய விபரம் தெரியவந்தது.

மார்ட்டின் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சேலம் நில அபகரிப்பு கேஸ், இவரது மற்றைய டீலிங்களுடன் ஒப்பிடும்போது, சுண்டங்காய் கேஸ். அப்படியிருந்தும் இவர் இந்த கேஸில் கைதாகியிருப்பது, அதுவும் கைது பற்றி போலீஸ் அடக்கி வாசிப்பது எல்லாமே, மற்றொரு திட்டத்தின் தொடக்கம்தான் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

எக்கச்சக்க சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்புடைய மார்ட்டின், அந்த விவகாரங்களின் லீகல் விவகாரங்களைக் கவனிக்க ஒரு லீகல் டீமையே வைத்திருக்கிறார். தவிர காவல்துறையில் சகல மட்டங்களிலும் இவரது மாதச் சம்பளப் பட்டியலில் ஆட்கள் உண்டு.

இதனால் தமிழகத்தின் எந்த மூலையில், எந்தப் போலீஸ் ஸ்டேஷனில், எந்த கேஸ் பதிவாகலாம் என்பதை இவர் முன்கூட்டியே தெரிந்து கொண்டுவிடுவார். அதையடுத்து அவரது லீகல் டீம், துரிதமாகச் செயற்பட்டு, முன் ஜாமீன் பெற்றுக் கொடுத்துவிடும்.

சுருக்கமாகச் சொன்னால், இவரது குற்றங்கள் எல்லாமே சிஸ்டமேட்டிக்காக ஹான்டில் செய்யப்படுபவை.


அப்படியான நிலையில், கோடிகளில் செய்யப்பட்ட மோசடி விவகாரங்களின் பட்டியலை வைத்து இவர்களது லீகல் டீம் முன் ஜாமீன் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்க, வெறும் 49 லட்சம் ரூபா மோசடி ஒன்றில் ஆளை அமுக்கியிருக்கிறது சேலம் போலீஸ்.

இப்படியொரு சில்லரை கேசுடன் தம்மைக் கைது செய்ய வருவார்கள் என்று எதிர்பார்த்திராத மார்ட்டின், கைதாகியுள்ளார். கைது செய்யப்போகும் விஷயமும் மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

கோவையைச் சேர்ந்த சான்டியாகோ மார்ட்டின், மார்ட்டின் லாட்டரி ஏஜன்சிஸ் லிமிடெட் நிறுவனம், எஸ்.எஸ்.மியூசிக், சுர்க் சங்கீத் ஆகிய இசை சேனல்கள், மார்ட்டீன் புரொடக்ஷன்ஸ் என்ற சினிமா பட தயாரிப்பு நிறுவனம், லாட்டரி இன்சிடர்.காம் என்ற வெப்சைட், ஆன்-லைன் வர்த்தகம், இன்டர்நெட், லாட்டரி விளையாட்டு என்று ஏகப்பட்ட தொழில்களை நடத்தி வருபவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி வசனம் எழுதிய, இளைஞன், பொன்னர் – சங்கர் ஆகிய படங்களின் தயாரிப்பாளர்.

இவரது தி.மு.க. முதல் குடும்ப பிசினெஸ் டீலிங் பற்றி விசாரிக்க, இப்படியொரு தந்திரமான முறையில் தமது பிடிக்குள் கொண்டு வந்திருக்கிறது போலீஸ். அதைத் தொடக்கமாக வைத்து, மற்றைய கேஸ்கள் உள்ளே கொண்டுவரப்படும் என்கிறார்கள் காவல்துறை வட்டாரங்களில்.

அவற்றை வைத்து ஆளை அமுக்குவார்களா, அல்லது இவரை அப்ரூவர் ஆக்குவார்களா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

-திருச்சியிலிருந்து ஷங்கர் தேவராஜின் குறிப்புகளுடன், ரிஷி.

Thanks to Viruvirupu

No comments: