ஹரிஷ் ஹண்டேயின் தந்தை ரூர்கேலா உருக்கு ஆலையில் பணியாற்றும் ஒரு பொறியாளர். எல்லா மத்திய தர குடும்பத்தின் தந்தையைப் போல மகனுக்கு சிறப்பாகப் படிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி வளர்த்தார். பள்ளிப் படிப்பு, தொடர்ந்து ஐ.ஐ.டி.யில் இன்ஜினீயரிங் முடித்து, அமெரிக்காவில் மேற்படிப்புக்காகப் போனவர், ஸ்காலர்ஷிப் கிடைத்ததினால் பி.எச்.டி.யும் முடித்தார். படித்தது எனர்ஜி இன்ஜினீயரிங். படிக்குபோதே பெரிய வேலைகள் அழைத்தன. ஆனால் அவரோ, தொழில் செய்ய தீர்மானித்திருந்தார்.
ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டபோது, பாதித்த ஒரு விஷயம், உலகின் பல பகுதிகளில் இன்னும் மின்சார வசதியில்லை என்பது தான். மாற்று சக்தியான சூரிய ஒளி மின்சாரம் பரவலாக மக்களை அடையவில்லை. அப்போது எழுந்த எண்ணம், சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பை ஏன் தொழிலாகச் செய்யக் கூடாது என்பதுதான். இந்தியா திரும்பிய ஹரிஷ் ஹண்டேயின் தொழில் தொடங்கும் யோசனையைக் கேட்டு, அமெரிக்காவில் படித்துப் பெரிய வேலைக்குப் போவார் என்று எதிர்பார்த்த குடும்பத்தினரும் உறவினரும் அதிர்ந்து போனார்கள்.
ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது என்று நம்பிய ஹரிஷ், மின்சாரமே இல்லாத கிராமங்களுக்கு சூரிய ஒளியிலிருந்து மின்சார விளக்குகள் தர, 1995ல் செல்கோ (SELCO INDIA) கம்பெனியைத் தொடங்கினார். இன்று இந்த நிறுவனம் 1,20,000 கிராம இல்லங்களில் விளக்கு ஏற்றியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் மூன்று முக்கிய குறிக்கோள்களாக ஹரிஷ் அறிவித்தது.
1) ஏழை மக்களுக்கு டெக்னாலஜியின் பயன் போய் சேரவேண்டும்.
2) இதன் பயன்களை அடையச் செய்ய அவர்களையும் வளர்க்க வேண்டும்.
3) இம்மாதிரி சமூகத் தேவைகளையும் வியாபார ரீதியில் வெற்றிகரமாகச் செய்ய முடியும்.
கடந்த 7 ஆண்டுகளில் இதை வெற்றிகரமாகச் செய்து காண்பித்து வியக்க வைத்திருக்கிறார் ஹரிஷ். கர்நாடகத்திலும் குஜராத்திலும் 170 பேர் வேலை செய்யும் இவரது நிறுவனத்தின் கடந்த ஆண்டு வரவு செலவு 13 கோடிகள். இதுவரை விற்பனை செய்திருப்பது 1,00,000க்கும் மேற்பட்ட சோலார் சிஸ்டம்கள்.
இந்த மகத்தான வெற்றியைச் செய்து காட்டிய ஹரிஷ் ஹண்டேக்கு 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விருதுகளை வழங்கி கௌரவித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா தேர்ந்தெடுத்துச் சந்தித்த 20 பேர்களில் இவரும் ஒருவர். சென்ற மாதம் இவருக்கு இந்த ஆண்டு ஆசிய நோபலாகக் கருதப்படும் மாகஸெஸே விருது (MAGASAYSAY AWARD) அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இவர், இந்த வெற்றிகளை அடைய கடந்து வந்த பாதை, ரோஜா மலர்கள் விரித்த பாதையில்லை. கடினமானது, மிகக் கடினமானது. கர்நாடக மாநிலத்தில்தான் மிக அதிகமான கிராமங்கள் மின்வசதி பெறாதவை எனபதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? அதைக் கண்டுபிடித்து, அங்கிருந்து தம் பயணத்தைத் தொடங்கிய இவர் சந்தித்த பிரச்னைகள் ஏராளம். முதலில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் என்பதையே கிராம மக்கள் நம்பத் தயாராக இல்லை. நம்பியவர்களும் அதில் முதலீடு செய்யத் தயாராக இல்லை. தமது ஸ்காலர்ஷிப் பணத்தில் மிச்சம் பிடித்துச் செய்த முதலீடான 5000 அமெரிக்க டாலர்களில், செய்முறை விளக்கங்களிலேயே மெல்ல கரைந்து கொண்டிருந்தது. கடைசியாக ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் வேண்டாம் என்று சொன்ன ஒரு பீடி வியாபாரி வீட்டில் அவர் இல்லாத போது கூரையில் பேனல்களைப் பொருத்தி 4 பல்புகளையும் ஒரு சின்ன டி.வி. யையும் இணைத்திருந்தார். மாலையில் வீட்டுக்கு வந்த வியாபாரி, தன் வீட்டில் பெரிய ஒளியையும் கூட்டத்தையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு, உடனே அதை வாங்கிக் கொள்ள ஒப்புக்கொண்டார். இப்படி விற்ற முதல் சோலார் சிஸ்டத்தின் பணத்தில், அடுத்தது வாங்கி அதை விற்று, அடுத்ததை வாங்கி வியாபாரத்தை வளர்த்தார். சற்று யோசித்துப் பாருங்கள். அமெரிக்காவில் எனர்ஜி இன்ஜினீயரிங்கில் டாக்டரேட் வாங்கியவர் ஒரு படிப்பில்லாத வியாபாரியிடம் மன்றாடி தன் ஐடியாவை விற்றிருக்கிறார். ஏன்? தன் முயற்சியில் நம்பிக்கையும் வெற்றி பெறவேண்டும் என்ற வெறியும் தான். புதிய பாதையில் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது மிக மிக அவசியம் என்கிறார் ஹரிஷ்.
இரண்டு அல்லது நாலு டியூப்லைட், ஒரு ஃபேன், ஒரு ரேடியோவை இயக்கத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து பெற்று, அதை ஒரு பாட்டரியில் சேமிக்கும் வகையான சோலார் பேனல் தயாரித்து விற்கிறார்கள். விலை 8000லிருந்து 10 ஆயிரம் வரை. ஆனால் அந்தக் கிராமவாசிகளுக்கு இது பெரிய தொகை. கடனில் கொடுத்தால் வாங்கத் தயார், ஆனால் கடன் கொடுப்பார் தான் யாருமில்லை. வங்கிகளுக்கு இது ஏழைகளின் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதைப் போராடி, புரிய வைத்து, கடன் வழங்க ஒரு திட்டத்தையே உருவாக்கிய பெருமை இவரையே சாரும். ஆனால் சிக்கல் தொடர்ந்தது. கடன் வழங்க மனுதாரரின் மார்ஜின் பங்காக 10-15% பணம் கட்ட வேண்டும். அதற்குக் கூட வசதியில்லாதவர்கள் அந்தக் கிராமப் பகுதி மக்கள். வங்கிகளுக்கு அந்தப் பணத்துக்குத் தனது கம்பெனி கியாரண்டி கொடுக்கும் என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தியதின் மூலம் பல கிராம மக்கள் பயன்பெற்றனர்.
இன்று பல வங்கிகள், இவரது திட்டத்தின் மூலம் கிராமங்களில் வழங்கும் கடன்களை அதிகரித்திருக்கிறார்கள். முக்கியக் காரணம், இவர்களே வங்கிகள் வழங்கிய கடனை வசூலிக்கவும் உதவுகிறார்கள். சோலார் பேனல்கள் விற்பது மட்டுமில்லை இவர்கள் பணி, அதை நிறுவுவது, மாதம் ஒருமுறை பார்த்துப் பராமரிப்பது போன்ற பணிகளையும் செய்கிறார்கள். அதற்கு உள்ளூர் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் வேலைவாய்ப்பையும் உண்டாக்கியிருக்கிறார்கள். கடனில்கூட இந்த வசதியைப் பெற முடியாதவர்களைக் கூட இவர்கள் ஈர்க்கிறார்கள்.
ஓர் ஆதிவாசிகள் கிராமத்தில் கூடை செய்பவர்கள் போதிய வியாபாரம் இல்லாததால் விவசாயக் கூலிவேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மின் விளக்குகள் அமைத்துக் கொடுத்து இரவில் செய்யும் கூடைகளில் ஒரு கூடைக்கு 5 ரூபாய் வீதம் கடனைத் திருப்பிச் செலுத்த உதவியிருக்கிறார்கள். அரிக்கேன் விளக்கில் படித்த மாணவர்கள் இன்று ட்யூப் லைட்டில் படிக்கிறார்கள். பீடி சுற்றுவது, தையல் போன்ற வேலைகளை இரவில் செய்கிறார்கள் பெண்கள். சுருக்கமாகச் சொன்னால் ஒரு மின்சாரப் புரட்சியை இவரது நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது. இதை நம் கிராமப்புறப் பகுதிகளிலும் வியாபார ரீதியாகச் செய்ய முடியாதா என்று எண்ணும்; அல்லது இதை மேம்படுத்த ஏதாவது யோசனை வைத்திருக்கிறீர்களா? ஹரிஷ் ஹண்டேவை தொடர்பு கொள்ளுங்கள். காத்திருக்கிறார்.
Thursday, August 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment