மத்தியில் இருக்கிற காங்கிரஸ் ஆட்சி ஊழலில் புதிய வரலாறு படைத்தது என்பது, இன்று வடபழநி கோவிலில் காதுகுத்தி மொட்டையடித்துக் கொண்ட ஒருவயதுக் குழந்தைக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல அண்ணாவின் உண்ணாவிரததுக்குப் பயந்து, பற்பல நிபந்தனைகளையெல்லாம் விதித்து, இப்போது "அனுமதியெல்லாம் கிடையாது," என்று தில்லி காவல்துறையின் மூலம் சொல்ல வைத்திருப்பது காங்கிரஸின் கடைந்தெடுத்த கையாலாகாத்தனம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
எவ்வித நிபந்தனைகளுமின்றி அண்ணா ஹஜாரேயை அனுமதித்திருக்க வேண்டும். இம்முறை அண்ணாவின் உண்ணாவிரதம் பிசுபிசுத்துப் படுகேவலமாகத் தோல்வியடைந்திருக்கும். அதன்மூலம், அவருக்கு பல்பு கொடுக்கக் கிடைத்த பொன்னான வாய்ப்பை காங்கிரஸ் அரசு தவற விட்டுவிட்டது.
ஒன்றை கவனிக்க வேண்டும்! காவல்துறை விதித்த 22 நிபந்தனைகளில், வெறும் 6 தான் அண்ணாவின் பஜனைகோஷ்டியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மிக முக்கியமானதாக இவர்கள் சொன்னதென்ன? "5000 பேர்கள் என்ற கட்டுப்பாடெல்லாம் கூடாது: மூன்று நாட்கள் தான் என்பதையும் ஒப்புக்கொள்ள முடியாது," என்றுதான் நேற்று காலைவரையில் பேட்டிகளில் கிரண்பேடி மாய்ந்து மாய்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.
"தேவைப்பட்டால் உச்சநீதி மன்றத்தை அணுகுவோம்," என்று அர்விந்த் கேஜ்ரிவால் மார்தட்டினார். ஆனால், இன்று திடீரென்று அடுத்த திருப்பம். புதிதாக நான்கு நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். காரணம், அதிகபட்சம் 5000 பேர்கள், மூன்று நாட்கள் என்பதெல்லாம் தில்லி உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்த வரைமுறைகளுக்கு (guidelines) ஏற்ப விதிக்கப்பட்டிருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்திருக்கிறார்கள். முன்னாள் சட்ட அமைச்சரான சாந்திபூஷணும், முன்னணி வழக்குரைஞரான பிரசாந்த்பூஷணும் உடனிருக்கும்போதே இப்படியொரு சொதப்பல்! இதுதான் அண்ணா ஹஜாரேயின் குழுவிலிருக்கிற மெத்தப்படித்தவர்களின் லட்சணம்!
ஆக, மொத்தம் 22-ல் 6 நிபந்தனைகளை, "அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது(unconstituitional)" என்று அண்ணாவின் குழு தெரிவித்திருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுமா இல்லையா என்று சட்டநிபுணர்கள்தான் சொல்ல முடியும். அப்படியே இருந்தாலும், அதுகுறித்து அண்ணா ஹஜாரே கவலைப்படப் போவதில்லை. காரணம், ஏற்கனவே அவர்மீது ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது.
பி.பி.சாவந்த் அறிக்கையினால் பதவியிழந்த முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் சுரேஷ் ஜெயின், அண்ணா ஹஜாரே மீது தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் அண்ணாவுக்கு எதிராகத் தீர்ப்பு அமைந்தது. "சுரேஷ் ஜெயின் போன்ற வசதிபடைத்தவர்களால் நீதிபதிகளை விலைக்கு வாங்கி சாதகமான தீர்ப்புக்களைப் பெற முடியும்," என்று அப்போது அண்ணா தெரிவித்த கருத்துக்களால், அவர்மீது வழக்கு தொடரப்பட்டு மிக அண்மையில்தான் அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியிருக்கிறார். (ஜூலை 2011 -ல் இன்னொரு வழக்கை சமரசமாகப் பேசி, திரும்பப் பெற வைத்திருக்கிறார் என்பதையும் நினைவூட்ட வேண்டும்)
அதே போல "இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்" நிதியிலிருந்து பணம் கையாடல் செய்ததாக பி.பி.சாவந்த் கமிட்டியால் அண்ணா ஹஜாரே குற்றம் சாட்டப்பட்டதை நேற்று காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி குறிப்பிட்டதும், அண்ணாவுக்குப் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.
"எனது பெயரை நீக்கும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்," என்று அடுத்த சவடால்!
அடுத்த சில நிமிடங்களில் எல்லா தொலைக்காட்சிகளுக்கும் பேட்டியளித்த நீதிபதி.பி.பி.சாவந்த், "ஆமாம், அண்ணா ஹஜாரே ஊழல் செய்ததை நான் குறிப்பிட்டிருக்கிறேன்.(I have indicted Anna Hazare for corruption) என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதும், அண்ணாவின் வாய் அடைத்துப்போனது. பி.பி.சாவந்த் அறிக்கை 2003-ல் சமர்ப்பிக்கப்பட்டது. எட்டு வருடமாக அதுபற்றி வாயே திறக்காமல் மவுனம் சாதித்த உண்ணா ஹஜாரேவுக்கு இப்போது ஏன் கோபம்?
இவருக்கு அரசியல் சட்டத்தைப் பற்றிப் பேச என்ன யோக்யதை இருக்கிறது? அதை மதிப்பவர்களாயிருந்தால், பாராளுமன்றக்குழுவுக்கு முன் சென்றவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இப்போது இவர்கள் செய்து கொண்டிருப்பது என்ன? அரசியல் சட்டத்தை மதிக்காதவர்களுக்கும், பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏகடியம் செய்பவர்களுக்கும் உரிமை கேட்க என்ன தகுதி இருக்கிறது?
சரி, இந்த மனிதருக்கு அரசியல் சட்டம், பாராளுமன்றம் மீதெல்லாம் நம்பிக்கையில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். இவர் கூறிக்கொள்வது போல உண்மையிலேயே இவர் காந்தீயவாதியா?
இவரது ராலேகாவ் சித்தி கிராமத்தை எல்லாரும் கொண்டாடுகிறார்கள் என்பது நிஜம். அந்த சிறிய கிராமத்தில் தன்னிறைவு ஏற்பட அண்ணா ஹஜாரே நிறைய பாடுபட்டிருக்கிறார் என்பதும் நிஜம். ஆனால், ராலேகாவ் சித்தியின் இன்னொரு பக்கத்தை ஏன் ஊடகங்கள் வெளியிடாமல் இருக்கின்றன?
யாராவது குடித்துவிட்டு வந்தால், அவர்களை தூணில் கட்டிப்போட்டு, ராணுவ பெல்ட்டால் அடிப்பாராம் அண்ணா ஹஜாரே! "இப்படிச் சொன்னால்தான் இவர்கள் திருந்துவார்கள்," என்பது இவரது வாதம். நான் சொல்லவில்லை; ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை சொல்கிறது.
இவரது கிராமத்தில் புகையிலைப் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன; நல்லது. அத்துடன் அசைவ உணவும் தடை செய்யப்பட்டிருக்கிறது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆடு, மாடுகளை மேய்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இவ்வளவு ஏன், ஊருக்குள் ஒருத்தரும் வீட்டில் கோடாரி வைத்திருக்கக் கூடாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அட, கேபிள் டிவி தடை செய்யப்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
கிராமத்தில் இவரிடம் பணிபுரிபவர்களுக்கு அடிமாட்டுக்கூலி கொடுத்து வேலை வாங்குகிறார். கிராமத்து மக்கள் யாரும் இடம்பெயர்ந்து நகரத்துக்குச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு விதித்திருக்கிறார். தன்னிறைவு, விவசாய வளர்ச்சி என்ற கவர்ச்சியான வார்த்தைகளுக்குப் பின்னால், உலகம் தெரியாத கிணற்றுத்தவளைகளாய் தம் கிராமத்து மக்களை இவர் வைத்திருக்கிறார். அங்கிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை மேற்படிப்புக்கே வாய்ப்பில்லாமல் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்திருக்கிறார்.
ராலேகாவ் சித்தி கிராமத்திலிருக்கும் மக்கள் இவரது பிடியிலிருந்து விடுபடத் துடிப்பதாக, பல மராட்டியப் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள்; இன்னும் எழுதி வருகிறார்கள்.
இதுவா காந்தீயவாதம்? பெல்ட்டால் அடிக்கிறவரா அஹிம்சாவாதி?
காந்தி மட்டுமல்ல; மக்களால் பெரிதும் போற்றப்படுகிற எந்தத் தலைவர்களைப் பற்றியும் எழுத எனக்கு எப்போதும் தயக்கமுண்டு. இருந்தாலும், கேட்கிறேன்!
காந்தி எத்தனை முறை உண்ணாவிரதம் இருந்தார்? மூன்று முறை! அதில் எத்தனை முறைகள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்? ஒரு முறை கூட இல்லை! அவர் பிளவுபட்ட சமுதாயங்களை ஒன்றிணைக்க உண்ணாவிரதம் இருந்தார். இந்த அண்ணா ஹஜாரே, தனது உண்ணாவிரதத்தால் சமூகத்தையே இரு கூறாகப் பிளந்திருக்கிறார். இவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களில் பெரும்பாலானோர் அரசியல் சட்டம், பாராளுமன்றம், ஜனநாயகம் எல்லாவற்றையும் உதவாக்கரைகள் என்று விரக்தியோடு சொல்லுமளவுக்கு நாட்டில் ஒரு எதிர்மறையான மனப்போக்கை உருவாக்கியிருக்கிறார்.
’அது உண்மைதானே?’ என்று கேட்பவர்களுக்கு! என்ன செய்யலாம்? 120 கோடி மக்களும் கடலில் போய் விழுந்துவிடலாமா? இல்லை மீண்டும் பிரிட்டிஷாரை வந்து ஆளச்சொல்லலாமா? அல்லது, ஜன் லோக்பால் சட்டம் வந்து விட்டால் எல்லாம் மீண்டும் புனிதமாகி விடுமா?
"ஆ.ராசா போன்றவர்களைத் தூக்கில் போட வேண்டும்," இது அண்ணா ஹஜாரே என்ற காந்தீயவாதி உதிர்த்த இன்னொரு முத்து. அரசியல் காரணங்களுக்காக மட்டுமல்ல, மனிதாபிமான அடிப்படையிலே கூட தூக்குத்தண்டனை என்பதே கூடாது என்று வாதாடுகிற மனித உரிமைக் காவலர்கள் அண்ணாவின் கருத்தை ஏற்றுக்கொள்வார்களா? அருந்ததி ராய், மேதா பாட்கர், தீஸ்தா சேத்தல்வாட், மல்லிகா சாராபாய், நீதிபதி.வி.ஆர்.கிருஷ்ண ஐயர் ஒப்புக்கொள்வார்களா? இதுவா காந்தீயவாதியின் லட்சணம்?
"ஹிஹிஹி! அதுலே பாருங்க, நான் காந்தீயவாதிதான். ஆனால், அப்பப்போ சத்ரபதி சிவாஜியின் கொள்கைகளையும் கடைபிடிப்பேன்," என்று இதற்கு நேற்று ஒரு விளக்கம் வேறு!
சத்ரபதி சிவாஜியின் கொள்கை என்றால் சிவசேனாவின் கொள்கையென்று வைத்துக்கொள்ளலாமா? அப்படியென்றால், திக்விஜய் சிங் சொன்னது போல இது சங்க்பரிவாரின் ஆசீர்வாதம் பெற்ற போராட்டமா? (ஆர்.எஸ்.எஸ்.ஏற்கனவே ஆதரவு தெரிவித்து விட்டது என்பதையும் நினைவில் கொள்க!)
சுரேஷ் ஜெயின் தொடுத்த மானநஷ்ட வழக்கில் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை பெற்று, சிவசேனாவின் முதலமைச்சர் மனோகர் ஜோஷியின் தலையிட்டால் ஒரே நாளில் விடுதலையானவர் அல்லவா நமது காந்தீயவாதி அண்ணா ஹஜாரே?
பின்னாளில் நரேந்திர மோதியைப் பாராட்டி கடிதம் எழுதினார். "நரேந்திர மோதியைப் பாராட்டினால் இந்தப் போராட்டத்திற்கு எங்களது ஆதரவு இல்லை," என்று மல்லிகா சாராபாய் ஒரு கடிதம் எழுதியதும், மெனக்கெட்டு அஹமதாபாத் சென்று, மெனக்கெட்டு நரேந்திர மோதியின் ஆட்சியை விமர்சித்து "நான் ரொம்ப நல்லவனாக்கும்," என்று எல்லாரையும் நம்ப வைக்க முயன்ற இந்தப் போலியா காந்தீயவாதி?
ராலேகாவ் சித்தியின் வளர்ச்சிக்கு அண்ணா ஹஜாரே ஒருவர் மட்டும் காரணமல்ல. புஷ்பா பாவே, பாபா ஆதவ், கோவிந்த்பாய் ஷ்ரோப், மோஹன் தாரியா, அவினாஷ் தர்மாதிகாரி என்று பலரும் இருந்திருக்கிறார்கள். வளர்ச்சிக்கு நிதியளித்தவை மத்திய மாநில அரசுகள்! அண்ணா ஹஜாரேயின் ஒரு தம்பிடி கூட செலவழிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆரம்பப்பள்ளிக்கென்று வழங்கப்பட்ட நிதியை, தான் தங்கியிருக்கும் கோவிலைப் புதுப்பிக்க அண்ணா ஹஜாரேதான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
காங்கிரசுக்கும் ஷரத்பவாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைப் பயன்படுத்தி, தனக்குத் தேவையான நிதியைப் பெற்றிருக்கிறார். ஷரத் பவார் ஒதுக்கியதும், சிவசேனாவுக்கு ஆதரவு; பிறகு மீண்டும் ஷரத் பவாருக்கு ஆதரவு என்று பச்சோந்தித்தனம் செய்து காரியங்களைச் சாதித்திருக்கிறார். இன்றுவரையிலும், அவரது உறவினர்கள் பல அரசியல் கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?
இதெல்லாம் தான் காந்தீயத்தின் அடையாளங்களா?
ஜன் லோக்பால் - அரசு லோக்பால் இவையிரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைப் பற்றிப் பலர் எழுதி விட்டனர். இரண்டில் எது வந்தாலும் அது ஊழலை முற்றிலும் ஒழித்து விடாது என்பது ஒரு புறம் இருக்கட்டும். அரசின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதை விட ஊழலை ஒழிக்க புகாரி ஹோட்டலில் கிடைக்கிற பல்குத்தும் குச்சியைப் பயன்படுத்தலாம்.
ஆனால், அண்ணாவின் வரைவு மிக உன்னதமா? அதன் அடிப்படை என்ன...? "ஊழல் என்றால் என்ன?" என்று பிரிவு 2(4) -ல் கீழ்க்கண்டவாறு விளக்கியிருக்கிறார்கள்.
"to include anything made punishable under Chapter IX of the Indian Penal Code or under the Prevention of Corruption Act (PCA), 1988."
ஆக, இதன் அடிப்படை ஏற்கனவே உள்ள சட்டங்கள் தான் என்பது புரிந்திருக்கும். ஆகவே, அந்த சட்டங்களில் இருக்கிற அனைத்து குறைபாடுகளும் அண்ணா ஹஜாரேயின் ஜன் லோக்பாலுக்கும் இயல்பாகவே பொருந்தும் என்பதுதானே உண்மை...? ’இருக்கிற சட்டங்கள் போதாது; புதிதாய்ச் சட்டம் கொண்டு வருகிறோம்," என்று புறப்பட்டவர்களே, இது யாரை ஏமாற்றுகிற வேலை?
Prevention of Corruption Act (PCA) என்ற ஊழல் ஒழிப்புச் சட்டம் எல்லாக் குடிமகன்களுக்கும் பொருந்தாது. அது மக்கள் சேவகர்கள் (Public Servants) என்ற ஒரு பிரிவை மட்டுமே கருத்தில்கொண்டு இயற்றப்பட்ட சட்டம். அத்துடன், ஜன் லோக்பால் வரைவில் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 410 முதல் 424 வரையிலான சட்டப்பிரிவுகள் விலக்கப்பட்டுள்ளன. பொது சேவகரோ அல்லது தனியாரோ மோசடி அல்லது ஏமாற்று போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் தண்டிப்பதற்குரிய பிரிவுகள் அவை. அவற்றை ஜன் லோக்பால் மசோதாவிலிருந்து விலக்கியதால் என்ன விளைவு ஏற்படும்?
ராமலிங்க ராஜு போன்ற பணமுதலைகளயோ, ஹர்ஷத் மேத்தா, கேதன் தேசாய், தெல்கி போன்றவர்களையோ அண்ணாவின் ஜன் லோக்பால் சட்டத்தால் தண்டிக்க முடியாது. இவ்வளவு ஏன், ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி போன்றவர்கள் மீது கூட "மோசடி" என்ற குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது.
ஏன்? ஏன்?? ஏன்???
சரி, அரசு கொணர்ந்துள்ள லோக்பால் சட்ட வரைவில், அரசல்லாத நிறுவனங்கள் (Non Government Organisations) மீதும் நடவடிக்கை எடுக்க வழிவகைகள் உள்ளன. ஆனால், அவற்றை அண்ணா ஹஜாரேயின் குழு வன்மையாக எதிர்த்தது. ஏன்? தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் ஊழல் நடப்பதில்லையா? அண்ணாவின் ’இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்’டிலேயே நடந்தது என்பது தானே பி.பி.சாவந்த் அறிக்கையின் சாரம்?
மும்பையில் அமைந்துள்ள லீலாவதி ஹாஸ்பிடல் மிகவும் பழமையானது மட்டுமல்ல; பிரம்மாண்டமானது கூட! இது ஒரு சேவை நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிக அண்மையில் இந்த டிரஸ்டில் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கில் அந்நியச்செலாவணி மோசடி நடந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வந்தனவே?
தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் பல என்ன செய்கின்றன? மக்கள் சேவை என்று சொல்லிக்கொண்டு அரசுகளிடமிருந்து நிதி வசூலிக்கின்றன; வெளிநாடுகளிலிருந்து நன்கொடை மற்றும் நிதியுதவி பெறுகின்றன. "நான் தான் தலைவர், நீ செயலாளர், நீ பொருளாளர்," என்று சுயேச்சையாக (adhoc) நிர்வாகத்தை உருவாக்கி, வருகிற நிதிகளை மனம்போலச் செலவழிக்கின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடியவை தவிர மீதமிருப்பவை மிக மோசமான நிர்வாகம், பணமோசடி என்ற அளவிலே தான் இருக்கின்றன.
இவற்றை லோக்பாலின் கீழ் கொண்டு வர வேண்டாம் என்று அண்ணா சொல்வது ஏன்?
ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. ஆனால், அதை ஒழிக்க அண்ணா ஹஜாரே ஒருவரால் தான் முடியும் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை!
ஏப்ரல் மாதம் தொடங்கி, இன்று வரையில் அண்ணா ஹஜாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தேடுவதில் செலவழித்த நேரத்தில், ஒருவராவது ஊழலுக்கு எதிராக ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருப்பார்களா? இம்முறை உண்ணாவிரதம் முடிந்ததும், அடுத்த உண்ணாவிரதம் வரைக்கும் கைகளைக் கட்டிக்கொண்டு, "அண்ணா என்ன சொல்கிறார் பார்ப்போம்?" என்று காத்திருக்கப் போகிறார்களா?
இன்னும் ஒரே ஒரு டிராபிக் ராமசாமி தானே இருக்கிறார்?
தொண்டு நிறுவனங்களை விடுங்கள்; அவை நடத்தப்படுகிற லட்சணம் எல்லாருக்கும் தெரியும். ஜாதி, பதவி, சமூக அந்தஸ்து, பணவசதி போன்ற அடிப்படையில் இயங்கும் பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள், அடிக்கடி செய்தித்தாள்களில் புகைப்படம் போட்டு, பேனர் தூக்கியது தவிர என்ன கிழித்திருக்கிறார்கள்?
இயலாமையில் உழன்று கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கமும், மெத்தப்படித்த புத்திசாலிகளின் கூட்டமும் ஊழலுக்கு எதிரான தங்களது கண்டனங்களைத் தெரிவிக்க அண்ணா ஹஜாரேயின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள்; இவராவது வந்தாரே என்ற பெருமூச்சுடன்! ஆனால், அண்ணாவின் போராட்டம் போகிற திசையைப் பார்த்தாவது, இது சத்யாகிரஹம் இல்லை; வேறு என்னவோ திட்டமிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டாமா?
அனேகமாக, இது அண்ணாவைப் பற்றி நான் எழுதுகிற கடைசி இடுகையாய் இருக்கும். வாசிக்கிறவர்கள் என்ன நினைக்கிறார்கள், எத்தனை பேர் follow செய்வதை நிறுத்துவார்கள், எத்தனை பேர் தனிமடலில் திட்டப்போகிறார்கள் என்பது பற்றியெல்லாம் கவலையில்லை.
ஊழலுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. கொடுக்கல்-வாங்கல்! முதலில் கொடுப்பதை நிறுத்துவோம் என்று உறுதி மேற்கொண்டாலொழிய, ஊழல் ஒழியவே ஒழியாது - எத்தனை ஆயிரம் லோக்பால் சட்டங்கள் வந்தாலும் சரி!
Tuesday, August 16, 2011
அண்ணா ஹஜாரே ஊழல் செய்ததை நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment