Monday, August 8, 2011

அமெரிக்கா வருபவர்களுக்கு...டிப்ஸ்

அமெரிக்காவுக்குள் நுழையும்போது செடி, கறிவேப்பிலை, காய்கறி, பழங்கள் இவற்றைக் கொண்டு வரக் கூடாது. உங்கள் பெட்டிகளை சுங்கத்தில் எக்ஸ்ரேயில் பார்ப்பார்கள். ஏதாவது இருந்தால் அபராதம் கட்டச் சொல்வார்கள். தொல்லைதான். அதனால் இமிக்ரேஷன் முன்னாடியே விமானத்தில் சாப்பிட பழங்கள் கொண்டு வந்திருந்தால் கூட எறிந்து விடுங்கள். விதைகள், பொடி வகைகள் அனுமதிக்கப்படும்.

* வெளியில் எங்கே போனாலும் வீட்டருகேயே வாக் போனால் கூட நீங்கள் யார் என்பதை தெரிவிக்கும் ஐடி கார்ட் இல்லாமல் போகாதீர்கள். பாஸ்போர்ட்டிலிருந்து உங்கள் புகைப்படத்தோடு கூடிய பக்கத்தை ஜெராக்ஸ் பண்ணி வைத்துக் கொள்ளலாம். அல்லது இண்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் போன்றவை கூடவே இருக்கட்டும்.

* தெருக்களில் நடக்கும் போது நம்மூர் மாதிரி நினைத்த இடத்தில் தெருவைக் கடக்க முடியாது. பாதசாரிகளுக்கு என்றிருக்கும் கோட்டில் தான் கடக்க வேண்டும். நடுத் தெருவில் கிராஸ் பண்ணினால் ‘ஜே வாக்’ என்று ஃபைன் போட்டு விடுவார்கள். போலீஸ் எங்கே காத்திருப்பார்கள் என்று தெரியாது. ஜாக்கிரதை!

* என்னை போல் நீங்களும் முழு வெஜிடேரியனாக இருந்தால், ரெஸ்டாரண்டுகளில் வெஜிடேரியன் சூப் என்று அவர்கள் சொன்னாலும் ப்ராத்?" என்ன என்று கேட்டுக் கொள்ளுங்கள். அதில் சிக்கன் அல்லது பீஃப் ப்ராத் போட்டு பண்ணியிருப்பார்கள். ‘வெஜிடேரியன்’ என்பதற்கு நமக்கு அர்த்தம் ஒன்று. அமெரிக்கர்களுக்கு வேறு.

* குளிர்க் காலங்களில் கதவுப் பிடி போன்ற உலோகம் எதைத் தொட்டாலும் முதல் தடவை சட்டென்று ஷாக் அடிக்கும். அதற்கு முதலில் மிக வேகமாக ஒரு தடவை விரல் நுனியால் தொட்டு விட்டு மறுபடியும் நன்றாகப் பிடித்துக் கொள்ளலாம். சிந்தெடிக் புடவை, சுடிதார் உடுத்தினாலும் ஸ்டாடிக் அதிகமாக இருக்கும். அத்தோடு குளிரினால் தூசு, தும்பு எல்லாம் வேறு உடையில் ஒட்டிக் கொள்ளும். பருத்தி அல்லது பட்டுதான் நலம்.

* கோடைக் காலங்களில் பல இடங்களில் ‘ஃபார்மர்ஸ் மார்க்கெட் (Farmers Market)’ உண்டு. வாரத்திற்கு ஒரு நாள் டௌன் டவுனில் (மெயின் ரோட்) நாலைந்து தெருக்களில் போக்குவரத்தை நிறுத்தி விட்டு நம்மூர் மாதிரியே தெருவில் ஸ்டாண்ட் போடுவார்கள். விவசாயிகள் தங்கள் நிலத்திலிருந்து மிகவும் ஃப்ரெஷ்ஷாக காய்கறிகள் கொண்டு வந்து விற்கும்போது விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் க்ரோசரி கடைகளில் விற்கப்படும் காய்கறிகள் மாதிரி வதங்கி இருக்காது.

* இந்தியாவில் ஃபேஷியல், மானிக்யூர், பெடிக்யூர், ஹேர் கலர் போன்றவற்றை அடிக்கடி செய்துக் கொள்பவர்கள் அமெரிக்கா வந்தால் ஸலூன்களில் விலையைப் பார்த்து மயக்கம் அடைவீர்கள். உங்கள் மகன், மகள் வாழும் இடத்தில் ப்யூட்டி ஸ்கூல் இருந்தால் தொலைப்பேசியில் கூப்பிட்டு விசாரியுங்கள். படிப்பு முடிக்கும் மாணவ மாணவிகள் அவற்றை ‘ப்ரொஃபஷனல்’ ஆகச் செய்வார்கள். விலையும் குறைவாக இருக்கும்.

* உங்கள் செல்லத்துக்குக் குழந்தைகள் இருந்து அவர்கள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும்போதுதான் உங்களுக்குப் பிடித்தமான தமிழ் சீரியல் டீவியில் போய்க் கொண்டிருக்கும். அவர்களுக்காக உங்கள் சீரியலைத் தியாகம் பண்ணத் தேவையில்லை. டிஷ் நெட் வொர்க்கில் இப்போது டிவிஆர் (DVR) கொடுக்கிறார்கள். வேறு நிகழ்ச்சியை ‘லைவ்’ டீவியில் பார்க்கும்போதே தமிழ் சேனலில் வரும் உங்கள் சீரியலை நீங்கள் டீவிஆரில் ரிகார்ட் பண்ணி வைத்துக் கொள்ளலாம். மறுநாள் பெரியவர்கள் வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் போன பிறகு அக்கடா என்று உட்காரும்போது ஆற அமரப் பார்க்கலாம். இதில் கூடுதல் போனஸ் என்னவென்றால் விளம்பரங்களை நொடியில் தள்ளி விடலாம்.

* வீட்டில் டிஷ் நெட்டில் அல்லது கேபிளில் தமிழ் சேனல்கள் இல்லையென்றாலும் இப்போதெல்லாம் எல்லா நிகழ்ச்சிகளையுமே கம்ப்யூட்டர் ஆன் லைனில் பார்த்து விடலாம். அத்தோடு நீங்கள் இந்தியாவிலிருந்து வெளி வரும் தமிழ், ஆங்கில தினசரிகளையும் அதன் அசல் வடிவத்திலேயே படிக்கவும் இயலும்.

* டெலிவிஷனில் அமெரிக்க நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது சில சமயம் அவர்கள் வேகமாகப் பேசும் ஆங்கிலம் புரியாமல் போகலாம். அதற்கு ‘க்ளோஸ்ட் காப்ஷன் (Closed Captions)' ’ போட்டுக் கொண்டால் அவர்கள் பேசுவது அப்படியே எழுத்து வடிவத்திலும் கூடவே வரும். புரிவது சுலபமாக இருக்கும்.

* எங்கள் வீட்டில் ‘நெட் ஃப்ளிக்ஸ் (Netflix)'’ என்ற மெயில் ஆர்டர் கம்பெனியிலிருந்து தான் படங்களின் டிவிடி எடுத்துப் பார்ப்போம். ஆன் லைனில் உங்களுக்கு வேண்டிய டிவிடிகளை ஆர்டர் பண்ணலாம். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என்று நிறைய டிவிடிகள் (சட்டபடி வெளிவந்தவை மட்டுமே) சொற்ப மாதக் கட்டணத்திற்கு உங்கள் வீட்டிற்கே தபால் மூலம் அனுப்பப்படும். அதை பார்த்த பின், தபால் மூலம் அவர்கள் கொடுக்கும் கவரிலேயே வைத்து திருப்பி அனுப்பினால் க்யூவில் இருக்கும் அடுத்த படம் மறுநாளே வந்து விடும்.

* அமெரிக்காவில் ஒரு சௌகரியம். உங்கள் வீட்டு மெயில் பாக்ஸில் அனுப்ப வேண்டியதை வைத்து பெட்டியில் செருகி இருக்கும் ஒரு சிவப்பு நிறக்கொடியை ஏற்றி வைத்து விட்டால் தபால்காரரே எடுத்துக் கொண்டு போய் போஸ்ட் செய்து விடுவார். தபால் நிலையத்திற்குப் போக வேண்டிய அவசியம் கூட இல்லை. அல்லது கம்ப்யூட்டரில் டவுன் லோட் பண்ணிக் கொள்ளலாம்.

* பல ஊர்களில் சனிக்கிழமை, ஞாயிறு காலைகளில் ‘கராஜ் சேல் (Garage Sale)’என்று வீட்டு வாசல்களில் வைத்திருப்பது சுவாரசியமாக இருக்கும். ‘யார்ட் சேல் (Yard Sale)’ என்றும் சில இடங்களில் சொல்வார்கள். இனி தேவையில்லை என்று நினைக்கும் பொருட்களை நல்ல கண்டிஷனில் இருந்தால், தங்கள் வீட்டு வாசலில் கடைப் பரத்தி ஒவ்வொன்றிற்கும் விலையையும் போட்டு விற்பார்கள். நெயில் பாலிஷிலிருந்து ஃபர்னீச்சர் வரை எது வேண்டுமானாலும் கிடைக்கும். சில சமயம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மலிவாகக் கிடைக்கும்.

No comments: