Sunday, August 21, 2011

மிக்ஸ்டு அல்வா , உருளை தயிர்வடை

மிக்ஸ்டு அல்வா

தேவையானவை : உருளைக்கிழங்கு - கால் கிலோ, கேரட் துருவல் - ஒரு கப், பாதாம் பருப்பு - 25, தேங்காய் துருவல் - ஒரு கப், பால் - 300 மில்லி, ரவை - 100 கிராம், சர்க்கரை - 250 கிராம், நெய் - 100 மில்லி, முந்திரிப்பருப்பு - 10, பொடித்த ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை : உருளைக்கிழங்கை வேகவைத்து கட்டி இல்லாமல் உதிர்த்துக் கொள்ளவும். பாதாம் பருப்பை ஊற வைத்து, தோலை உரித்த பின், மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். துருவிய கேரட், தேங்காய் துருவலையும் பால் சேர்த்து தனித்தனியாக அரைக்கவும். அனைத்து விழுது களையும் உதிர்த்த உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அடி கனமான அகன்ற கடாயில் சர்க்கரையோடு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்து கொதித்ததும், ஒரு கரண்டி பால் விட்டால் சர்க்கரையில் உள்ள அழுக்கு ஓரமாக ஒதுங்கும். அதைக் கரண்டியால் எடுத்துவிட்டு... ரவையை சேர்த்து, கொதித்ததும் சிறிது நெய் விட்டு கிழங்கு கலவையை சேர்த்துக் கிளறவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து, நன்கு கிளறவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் மீண்டும் நெய் விட்டுக் கிளறி இறக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி, முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

- என்.பாப்பா, பாளையங்கோட்டை



உருளை தயிர்வடை

தேவையானவை: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - அரை கிலோ, அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், அரைத்த இஞ்சி - பச்சை மிளகாய் - கொத்தமல்லி விழுது - ஒரு டீஸ்பூன், தேங்காய் விழுது - அரை டீஸ்பூன், தயிர் - ஒரு கப், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், சர்க்கரை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை : ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, அரிசி மாவு, இஞ்சி - பச்சை மிளகாய் - கொத்தமல்லி விழுது, உப்பு ஆகியவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து, வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

கடைந்த தயிரில் சர்க்கரை, உப்பு, தேங்காய் விழுது சேர்த்துக் கலந்து... கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டவும். தட்டில் கொஞ்சம் தயிர் விட்டு அதன் மேல் வடைகளை வைத்து, பிறகு மீண்டும் கொஞ்சம் தயிரை வடைகளின் மேல் விட்டு பரிமாறவும். தயிரில் ஊற வைத்தால் வடை கரைந்துவிடும்.

விருப்பப்பட்டால் சிறிது மிளகுத்தூள் தூவி பரிமாறலாம்.

- பூமா ராகவன், சென்னை-24

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

மிக்ஸ்டு அல்வா: பாலுடன் சிறிதளவு மில்க்மெய்டும் சேர்த்தால் சுவை கூடும்.

உருளை தயிர்வடை: அரிசி மாவுக்குப் பதிலாக சோள மாவு அல்லது ரவை சேர்த்தால், அதிக ருசியாக இருக்கும்.

No comments: