Friday, August 19, 2011

தி.மு.க.,வினர் மீது, சொத்துக் குவிப்பு வழக்கு

நில மோசடி வழக்குகளையடுத்து, தி.மு.க.,வினர் மீது, சொத்துக் குவிப்பு வழக்குகளைப் பதிவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்குள் இந்த நடவடிக்கை துவங்கும். அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றதும், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், "மாஜி' அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் நில மோசடி மற்றும் இடம், கடை ஆக்கிரமிப்பு வழக்குகளில், தொடர்ந்து கைதாகி வருகின்றனர். சிலர் குண்டர் சட்டத்திலும் கைதாகியுள்ளனர். நில மோசடி வழக்குகளை விசாரிக்க, சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நில மோசடி வழக்குகளைக் கண்டித்து, கோர்ட்டில் தி.மு.க., வழக்கு தொடர்ந்தது. பெரும்பாலான வழக்குகளில், தி.மு.க., நிர்வாகிகள் எளிதில் விடுதலையாக வாய்ப்புள்ளதாக, அரசுக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.,வினரை அடக்கி வைக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, தி.மு.க., நிர்வாகிகள் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, முக்கிய தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பினாமிகளின் சொத்து விவரங்களை உளவுத்துறை சேகரித்து வருகிறது. மேலும், இந்தச் சொத்துகள் வருமானத்தில் வாங்கியதா அல்லது மிரட்டி வாங்கப்பட்டதா என விசாரிக்கின்றனர். சொத்துகளை வாங்க, உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலைத் தயார் செய்யும்படி, அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக, உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, சொத்துக் குவிப்பு வழக்குகளில், மேலும் பல தி.மு.க., நிர்வாகிகள் கைதாக வாய்ப்புள்ளது.

No comments: