விளையாட்டுத்தனமாக இருபது ஆண்டுகள் ஓடிவிட்டதை நினைக்கும்போது கவலையாகவும், அச்சமாகவும் இருக்கிறது. மயிருதிர்ந்துப்போன முன் தலையை கண்ணாடி முன்பாக தடவிப் பார்க்கிறேன். ரோஜாவே டீனேஜை தாண்டிவிட்டாள் என்றால், என் தலைமுறை ‘இளைஞர்’ என்கிற கவுரவத்தை இழந்துவருகிறது என்றே பொருள்.
1992 – இந்த வருடத்தை யார் மறந்தாலும் தமிழ் சினிமா மறக்காது. அப்போதெல்லாம் கார்த்திக்தான் அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நாயகன். 91 தீபாவளிக்கு தளபதியோடு, அமரன் போட்டி போடும் என்றெல்லாம் பெருத்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஏனெனில் ‘ராக்கம்மா கையத் தட்டு’வை விட, அமரனின் ‘வெத்தலைப் போட்ட ஷோக்குலே’ ஆடியோ சூப்பர் டூப்பர் ஹிட். ஏனோ அமரன் தாமதமாகி 92 பொங்கலுக்கு வெளியாகி மொக்கை ஆனது. தொடர்ந்து வெளியான கார்த்திக்-பாரதிராஜா காம்பினேஷனில் நாடோடித் தென்றலுக்கும் டவுசர் அவிழ்ந்தது. இன்று உலகத் தமிழர்களிடையே பல்வேறு காரணங்களால் பிரபலமான ரஞ்சிதாவின் அறிமுகம் நிகழ்ந்த படமிது. பிற்பாடு என்.கே.விஸ்வநாதனின் நாடோடிப் பாட்டுக்காரன் வெளியாகி, கார்த்திக்கின் மானத்தை வசூல்ரீதியாக காப்பாற்றியது.
மன்னன், சின்னக் கவுண்டர் படங்கள் வசூலில் சரித்திரம் படைத்தது. கடலோரக் கவிதைகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் சோலோவாக கோலோச்சிக் கொண்டிருந்த சத்யராஜூக்கு பெரிய லெட்-டவுன் இந்த ஆண்டில். ஆனால் அடுத்த ஆண்டே வால்டேர் வேற்றிவேல் மூலமாக தனக்கான மாஸ்டர் பீஸை அடையாளப் படுத்திக் கொண்டார்.
சூப்பர் ஸ்டாரின் அண்ணாமலை வசூல்ரீதியாக மட்டுமின்றி, அரசியல்ரீதியாகவும் சூட்டைக் கிளப்பியது. இன்று புரட்சித்தளபதி, சின்னத் தளபதி, செவன் ஸ்டார், ராக்கிங் ஸ்டார், லொட்டு, லொசுக்கு ஸ்டார்களுக்கெல்லாம் டைட்டிலில் விஷ்க் விஷ்க் சவுண்ட் போட்டு அலப்பறை செய்வதற்கு அண்ணாமலையே முன்னோடி.
மலையாள இயக்குனர் பரதனின் ‘ஆவாரம்பூ’ சூப்பர்ஹிட் பாடல்களோடு வெளிவந்து மண்ணைக் கவ்வியது. ஆனாலும் தீபாவளிக்கு அவரது இயக்கத்தில் வெளியான ‘தேவர் மகன்’ இன்றளவும் எவர்க்ரீன் ஹிட். முந்தைய தீபாவளிக்கு குணாவில் மாஸ் இழந்த கமல் ‘சிங்காரவேலன்’ மூலமாக மீண்டெழுந்தார். தேவர் மகனில் சிவாஜிக்கு தேசிய விருது ஜஸ்ட் மிஸ். அதையும் கமலே தட்டிக் கொண்டார்.
டாக்டர் கேப்டன் விஜயகாந்தின் அட்டகாச மேற்கத்திய பாணி நடனத்தில் வெளிவந்த ‘பரதன்’ குறிப்பிடத்தக்க ஒரு படம். பி.சி.ஸ்ரீராம் இயக்கிய மீரா (விக்ரம் அறிமுகம் என்று சொல்வார்கள். ஆனால் அவர் 89லேயே ஸ்ரீதரின் ‘தந்துவிட்டேன் என்னை’யில் அறிமுகமாகி விட்டார்) மரண அடி வாங்கியது. முரளி நடிப்பில் ராஜ்கபூர் இயக்கிய ‘சின்னப்பசங்க நாங்க’ சர்ப்ரைஸ் ஹிட். முந்தைய ஆண்டில் சாதனைப்படமான சின்னத்தம்பியை கொடுத்த பிரபு-வாசு காம்பினேஷன் ‘செந்தமிழ்ப்பாட்டு’ படம் மயிரிழையில் தப்பித்தது. 91ல் என் ராசாவின் மனசிலே மூலம் ஹீரோவாக அறிமுகமான ராஜ்கிரண், அடுத்த வெள்ளிவிழாப் படமான அரண்மனைக் கிளியை தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியிட்டார். இன்னும் நிறைய படங்கள். நினைவில் இருந்தவற்றை குறிப்பிட்டிருக்கிறேன். 92ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் வசூல் ஆண்டு.
பரபரப்பான சம்பவங்களை வைத்து படமெடுத்துக் கொண்டிருந்த ஆர்.கே.செல்வமணி, முதன்முறையாக ஒரு காதல் படமெடுத்து வெள்ளிவிழா கண்டார். இன்று ஆந்திர அரசியலின் சூறாவளியான ரோஜா மலர்ந்தது அப்போதுதான்தான்.
1992, ஆகஸ்ட் 15. அப்போதெல்லாம் இந்தியா, மூவர்ணக்கொடி என்று கேட்டாலே ரட்சகன் நாகார்ஜூனா மாதிரி நரம்புகள் புடைக்கும். தேசிய நீரோட்டத்தில் கலந்து, பகுத்தறிவு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போயிருந்த பருவமது. பள்ளியில் ஒருக்கா, தெருமுனையில் மறுக்கா கொடியேற்றிவிட்டு, தேசக்கொடிக்கு மரியாதை செலுத்தினோம். மடிப்பாக்கத்தில் அப்போது மொத்தமாக மூன்றே மூன்று காங்கிரஸ்காரர்கள் இருந்ததாக நினைவு. ஒருவர் தலைவர். மற்றவர் செயலாளர். மீதியிருந்தவர் பொருளாளர். அதில் ஒருவர் (என்னுடைய நாலுவிட்ட மாமா. ஐந்து விட்ட அக்காவை அவருக்கு கட்டிக் கொடுத்திருந்தோம்) சேவாதள சீருடையில் – யாருமே இல்லாத டீக்கடையில் டீ ஆற்றுவது மாதிரி – ஒரு கம்பத்தை அவரே நட்டு, ‘பாரத்மாதாகீ ஜே’ சொல்லி, அவரே கொடியேற்றி, அவரே கைத்தட்டி, ஒவ்வொரு கதவாக தட்டி சாக்லேட் கொடுத்து சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்.
டி.டி. தொலைக்காட்சியில் காலை பதினோரு மணியளவில் சிறப்பு ஒலியும், ஒளியும். முதல் பாட்டு ‘அண்ணாமலை அண்ணாமலை ஆசை வெச்சேன் எண்ணாமலே’ என்பதாக நினைவு. இன்றைய காஞ்சனாவான சரத்குமார் ஃபுல் ஹீரோவாக நடித்திருந்த ‘சூரியன்’ அன்றுதான் வெளியானது. செம்பருத்தியில் அறிமுகமான ரோஜாவின் இரண்டாவது படம். பவித்ரன் இயக்கம். இணை இயக்கம் ஷங்கர். ‘லாலாக்கு டோல் டப்பிமா’ பாட்டு பட்டையைக் கிளப்பியது. இந்தப் பாடல் ஒரு விபத்தாக மாறி, அடுத்தடுத்து வால்டர் வெற்றிவேல், ஜெண்டில்மேன் என்று பல படங்களில் பிரபுதேவா அயிட்டம் டேன்ஸராக பலமாக உருமாறி, இந்துவில் கதாநாயகனாகி, காதலனில் மாஸ் ஹீரோவாகி.. அது ஒரு தனி வரலாறு.
‘ஒளியும், ஒலியும்’ முடியும் நேரத்தில் வந்தது அந்தப் பாட்டு. மணிரத்னத்துக்கு முதன்முறையாக இளையராஜா தவிர்த்த புது இசையமைப்பாளர். கமல், ரஜினி, கார்த்திக், பிரபு என்று மாஸ் ஹீரோக்களை விட்டு விட்டு, தளபதியில் துண்டு கேரக்டரில் நடித்த அரவிந்தசாமியை ஹீரோவாக்கியிருந்தார். அதற்கு முன்பாக மதுபாலாவும் அவ்வளவு பிரபலமில்லை. அழகனில் மூன்றாவது, நாலாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.
எங்கள் வீட்டருகில் பானு அக்கா என்றொருவர் இருந்தார். பதினெட்டு, பத்தொன்பது வயதிருக்கும். பரதநாட்டியம் கற்றுக் கொண்டு நிகழ்ச்சிகளில் ஆடிக்கொண்டிருந்தார். ஒருமுறை அவரது நாட்டிய நிகழ்ச்சிக்கு போகும்போது, கூட வேனில் இன்னொரு சூப்பர் ஃபிகரும் இருந்தார். அவர்தான் மதுபாலா. பானுவும், மதுபாலாவும் ஒரே கட்டத்திலேயே சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார்கள். குடும்ப சினிமா பின்னணி இருந்ததால் மதுபாலா சுலபமாக நடிகையாகிவிட்டார். பானு என்ன ஆனாரோ தெரியவில்லை.
அதே ஆண்டில் ‘சித்திரைப் பூக்கள்’ படம் மூலமாக மடிப்பாக்கத்தில் இருந்து இன்னொரு ஹீரோயினும் அறிமுகமானார். அவர் வினோதினி. இந்து படத்தின் ‘எப்படி, எப்படி சமைஞ்சது எப்படி?’ பாட்டில் கெட்ட ஆட்டம் போட்டவரும் மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர்தான். சாரதா டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் என்னுடைய சீனியர். அடக்க ஒடுக்கமாக இன்ஸ்டிட்யூக்கு வந்து சென்றுக் கொண்டிருந்தவரை, ஸ்க்ரீனில் வேறுமாதிரி பார்த்தபோது கிடைத்த அதிர்ச்சி கொஞ்சநஞ்சமில்லை. இதே ஆண்டு என் பள்ளித்தோழன் ஆனந்தராஜின் அண்ணன் கணேசராஜூ ’சின்னத்தாயி’ படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். மடிப்பாக்கமே சினிமாப்பாக்கமாக மாறிவிட்ட ஆண்டு அது. இப்போதும் கூட பழம் பெரும் நடிகைகள், நடிகர்கள், டெக்னீஷியன்கள் நிறைய பேர் இந்த ஊரில் வசிக்கிறார்கள்.
ஓக்கே, மீண்டும் ரோஜாவுக்கு வருவோம்.
வேனில் பார்த்த அதே மதுபாலா ‘சின்ன சின்ன ஆசை’ என்று டிவியில் பாடுவதைப் பார்த்தபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. முதல் தடவை கேட்டபோதே வசீகரிக்கும் பாடல்கள் அரிதானவை. சின்ன சின்ன ஆசை அந்தவகை. குறிப்பாக உதய சூரியன் வேகமாக மேலெழும் பாடலின் ஆரம்பக் காட்சியில் வரும் இசை. ‘ரோஜா’வைப் பார்த்தேவிட வேண்டும் என்கிற ஆசை, பேராசையாய் கிளம்பியது.
மறுநாள் வகுப்பில் கூடி பேசினோம். எல்லோரையுமே சூரியனை விட ரோஜா கவர்ந்திருந்தாள். ஆலந்தூர் பாலாஜி என்பவனுக்கு தேவி தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் ஆள் யாரையோ தெரிந்திருந்தது. அவர் மூலமாக மொத்தமாக இருபது டிக்கெட்டுகள் ரிசர்வ் செய்தான் பாலாஜி. சொந்தக் காசை போட்டு டிக்கெட் வாங்கிவிட்டு, பிற்பாடு எங்களிடம் வசூல் செய்ய நாய்படாத பாடு பட்ட பாலாஜியை இப்போது நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
அதற்கு முன்பாக ஸ்கூல் கட் அடித்துவிட்டு பார்த்திருந்த ஒரே படம் செம்பருத்தி (காசி தியேட்டரில்). தேவிக்கு பஸ்ஸில் கூட்டமாக போகும்போது கொஞ்சம் பயமாகவே இருந்தது. யாராவது தெரிந்தவர் பார்த்துத் தொலைத்தால்? தேவி தியேட்டருக்கு பக்கத்திலேயே ப்ளோ ப்ளாஸ்ட் லிமிடெட்டின் மண்டல அலுவலகம் வேறு இருந்துத் தொலைத்தது. இதே கம்பெனியின் பாரிமுனை கிளையில் அப்பா வேலை பார்த்தார் என்றாலும், அடிக்கடி இங்கே வருவார்.
ஒருவழியாக தியேட்டருக்குள் போய் அமர்ந்தபிறகு படப்படப்பு குறைந்தது. ரோஜா ஏகத்துக்கும் ஆச்சரியப்படுத்தினாள். ரோஜாவில் சித்தரிக்கப்பட்ட நெல்லை சுந்தரபாண்டியபுரம் மாதிரியான டீசண்டான கிராமத்தை இன்றுவரை நான் எங்குமே நிஜத்தில் காணமுடிந்ததில்லை. அர்விந்த்சாமி கம்ப்யூட்டர் இன்ஜினியர். அதுவரை கம்ப்யூட்டரை கண்ணில் மட்டுமே பார்த்திருந்தவனுக்கு, அதுக்கு ஒரு இன்ஜினியரும் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. தேசக்கொடியை தீவிரவாதிகள் எரிக்க, அதை விழுந்து புரண்டு அர்விந்த்சாமி அணைக்க.. எங்கள் நெஞ்சங்களிலும் பற்றியெறிந்தது தேசவெறி. க்ளைமேக்ஸில் ரோஜா தன் கணவனோடு இணைந்ததைக் காண நேர்ந்தபோது கிடைத்த நிம்மதி சிலாக்கியமானது. ஒரு ஃபிகரை பிரபோஸ் செய்து, அவள் ஏற்றுக் கொண்டபோது கூட இந்த நிம்மதி கிடைத்ததில்லை.
அதுவரை சினிமாவில் பார்த்த கேமிரா வேறு. ரோஜா காட்டிய கேமிரா வேறு. பாத்திரங்களின் பின்னாலே கேமிரா நடந்தது, ஓடியது, குலுங்கியது. பாடல் காட்சிகளில் மொக்கையான டிராலி மூவ் மாதிரி மட்டமான டெக்னிக்குகள் இல்லை. காட்சிகள், படமாக்கம் எல்லாவற்றையும் தாண்டி ஈர்த்தது இசை. ஏ.ஆர்.ரகுமானைப் பற்றி இந்தியா டுடேவில் ஒரு சிறிய துணுக்கு மட்டுமே வாசித்திருந்த நினைவு. அப்போது அவருக்கு வயது 23 என்பதை அறிந்து பெரிய ஆச்சரியம்.
ஏதோ ஒரு நாள் கட் அடித்துவிட்டு படம் பார்த்தோம் என்றில்லாமல், அடுத்த சில மாதங்களுக்கு ரோஜா எந்நேரமும் நினைவில் நிழலாடிக் கொண்டே இருந்தாள். பி.பி.எல் சேனியோவில் ரோஜா கேசட்டை தேய்த்து, தேய்த்து ரெண்டு, மூன்று கேசட் வாங்க வேண்டியதாயிற்று. ‘காதல் ரோஜாவே’ மனப்பாடமானது. ‘புது வெள்ளை மழை’ பாடலில், அதுவரை தமிழ் சினிமாவில் கேட்காத பல ஓசைகளை கேட்க முடிந்தது.
அர்விந்த்சாமி தீவிரவாதிகளிடம் அடைபட்டிருந்தபோது போட்டிருந்தது மாதிரியே ஒரு ரெட் கலர் ஸ்வெட்டர் வாங்கிக் கொண்டேன். கொளுத்தும் கோடையில் கூட ‘தெய்வத்திருமகள் கிருஷ்ணா’ மாதிரி கழட்டாமலேயே அந்த ஸ்வெட்டரோடு அலைந்திருக்கிறேன். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆகிவிடலாமென்ற கனவோடு, மடிப்பாக்கத்தில் ஆரம்பித்திருந்த கம்ப்யூட்டர் சென்டருக்குப் போய் வேர்ட் ஸ்டார் எல்லாம் கற்றுக் கொண்டேன். மேலும் சில வருடங்களுக்கு தேசபக்தி நூறு கிரேடு செண்டிக்ரேடுக்கு குறையாமல் உஷ்ணமாகவே இருந்தது. அதற்கு ரோஜா ஒரு காரணம். பிற்பாடு +2 ஃபெயில் ஆகிவிட்டு வீட்டில் தண்டச்சோறு சாப்பிட்டுக் கொண்டு, ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது சிந்திக்க நிறைய நேரம் கிடைத்தது. பாழாய்ப்போன அந்த சிந்தனையால் அந்த 100 டிகிரி செண்டிக்ரேடு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, இப்போது 0 டிகிரி செண்டிக்ரேடாக உறைந்துப் போயிருக்கிறது.
இப்போது ரோஜாவை திரும்பிப் பார்க்கும்போது அது ஒரு மைல்கல் என்பதை அப்பட்டமாக உணரமுடிகிறது. தமிழ் சினிமாவை இந்திய அளவுக்கு நேரடியாக கொண்டுச்சென்ற முதல் படமாக தோன்றுகிறது. சுபாஷ்கய்தான் தேசிய இயக்குனர் என்கிற பாலிவுட்டின் அடாவடியை, இப்படத்தின் மூலமாக அடித்து நொறுக்கினார் மணிரத்னம். தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களை ஏற்றுக்கொண்டு, இந்திக்காரர்கள் மதிக்கும் கவுரவத்தை ஏற்படுத்தித் தந்தது ரோஜா. முன்னரே பாலச்சந்தர், எஸ்.எஸ்.வாசன் போன்றவர்கள் இந்தியில் வெற்றிக்கொடி நாட்டியிருந்தாலும், அந்த வெற்றிகள் தற்காலிகமானவை. மணிரத்னம் ரோஜாவில் கண்ட வெற்றி, இன்றளவுக்கும் தொடர்கிறது. சுதந்திர தினம் என்றாலே ‘பாரதவிலாஸ்’ என்கிற டி.டி.யின் அரதப்பழசான சம்பிரதாயமும் நொறுங்கிப் போனது. இந்தியிலும், தமிழிலும் குடியரசுதினம், காந்திஜெயந்தி, சுதந்திரதினம் என்று எண்ணற்ற முறை ரோஜா ஒளிபரப்பானது.
ஏ.ஆர்.ரகுமான் இந்திய சினிமா என்கிற எல்லையைத் தாண்டி ஆஸ்கரையே வென்றுவிட்டார். ‘சொட்டு நீலம் டோய், ரீகல் சொட்டு நீலம் டோய்’ போன்ற டிவி ஜிங்கிள்களுக்கு இசையமைத்தவரின் இன்றைய உயரத்தின் அச்சாணி ரோஜா.
ரோஜாவுக்கு இன்று வயது இருபது. முதல்முறை பார்த்தபோது கிடைத்த அதே அனுபவம், இப்போது பார்க்கும்போதும் கிடைக்கிறது என்பதுதான் இப்படத்தின் தனித்துவம். இன்னும் முப்பதாண்டுகள் கழிந்தாலும் இதே காட்சியனுபவத்தை ரோஜா வழங்குவாள் என்பதில் எனக்கு சந்தேகம் ஏதுமில்லை.
எழுதியவர் யுவகிருஷ்ணா at Wednesday, August 17, 2011
வகை அனுபவம், சினிமா, மசாலா மிக்ஸ்
Thursday, August 18, 2011
ரோஜாவே டீனேஜை தாண்டிவிட்டாள் என்றால், என் தலைமுறை ‘இளைஞர்’ என்கிற கவுரவத்தை இழந்துவருகிறது என்றே பொருள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment