Saturday, August 13, 2011

சிக்கனமே சிறந்த மருந்து!

அமெரிக்கக் கடன் பத்திரங்களின் மதிப்பை, தர நிர்ணய நிறுவனமான எஸ் அண்டு பி குறைத்துவிட, அதன் பொருளாதார வளத்தில் நம்பிக்கை கொண்டிருந்த உலக நாடு களெங்கும் பேரதிர்ச்சி. தன் சக்திக்கு மீறி கடன் வாங்கி, வளர்ச்சிப் பணிகளில் செலவிடாமல், ஆடம்பரத்தில் கரைத்து விட்ட அமெரிக்காவுக்கு, இது வரலாற்று அவமானம். மீண்டும் ஓர் பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சி, முதலீட்டாளர்களும் தொழிலதிபர்களும் திகிலில் உறைந்திருக்கிறார்கள்.

காமன்வெல்த் விளையாட்டுச் செலவினங்களைப் பற்றிய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் காட்டமான அறிக்கை, அபரிமிதமான செலவைப் பற்றித்தான் எடுத்துரைக்கிறது. வேண்டுமென்றே ஓர் அவசர நிலை போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு, வழக்கமான சர்வதேச டெண்டர் நடைமுறைகள் கைவிடப்பட்டு, அதிக செலவுக்கு வழி கோலப்பட்டு இருக்கிறது என்று குற்றம்சாட்டுகிறது அவ்வறிக்கை. ஏன் இப்படி நடைபெற்றது, யாரெல்லாம் இதனால் முறையற்ற வழியில் பயன் பெற்றிருப்பார்கள் என்பது பிரதமரின் கவனத்துக்கும் தீவிர ஆய்வுக்கும் உரியது.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கௌன்சில் தலைவரான சி.ரங்கராஜன், ‘நிதிநிலை அறிக்கையில் நிதிப் பற்றாக்குறை அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,’ என்று கருத்து தெரிவித்ததோடு, இவ்வாண்டு இந்தியப் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவிகிதமே இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இது, முதலில் 9 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. கடனைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள், வளர்ச்சியற்ற திட்டங்களில் செலவிட வேண்டாம், அனாவசிய செலவுகள் வேண்டாம் என்பதையே மத்திய அரசுக்கு, ரங்கராஜன் சூசகமாகத் தெரிவித்து இருக்கிறார்.

சி.ஏ.ஜி.யின் மற்றொரு அறிக்கை, உ.பி.யின் முதல்வர் மாயாவதி கட்டியிருக்கும் அம்பேத்கர், கன்ஷிராம் நினைவுச் சின்னங்களில் ரூ 66 கோடி அளவுக்குக் கூடுதல் செலவு ஏற்படுத்தி இருப்பதாகக் கண்டித்திருக்கிறது. நினைவுச் சின்னங்கள் வேண்டாம் என்பது அல்ல கருத்து; மக்கள் பணத்தை அனாவசியமாக வாரி இறைக்க வேண்டாம், இழப்பு ஏற்படுத்த வேண்டாம் என்பதே இதன் உட்பொருள்.

தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், மாநில அரசின் கடன் சுமை ஆண்டு இறுதியில், பதினேழாயிரம் கோடி உயர்ந்து, ரூ 1,18,801 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. மத்திய அரசு நிர்ணயித்து இருக்கும் கடன் வரம்புக்குள்தான் செலவுகள் செய்யப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வரம்புக்குத் தொழில் வளர்ச்சி நிபந்தனை உண்டு. தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சி நோக்கமற்ற இலவசங்களே கடனுக்கான முழுமுதற் காரணமாக இருக்கப்போகிறது.

பணப் புழக்கத்தை ஏற்படுத்தினால், பொருளாதாரம் தலைநிமிரும் என்பது சத்தற்ற கொள்கை. அதன் தோல்விக்கு நேரடி உதாரணம், நிலைகுலைந்து இருக்கும் இன்றைய அமெரிக்கா. பயன் தரா செலவுகள், ஆடம்பரம், அனாவசிய செலவுகள், கிரிமினல் குற்றம். அமெரிக்கச் சரிவில் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம், சிக்கனம்.

சிக்கனம், அது தேவை இக்கணம்!

No comments: