Friday, August 12, 2011

பேசுங்கள் பிரதமர் அவர்களே!

எல்லோருமே அளவுக்கு அதிகம் பேசும் டெல்லியில் மௌன சாமியார்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. 'எதுவுமே தெரியாத’ நம்முடைய பிரதமர் இந்த ரகசியத்தை நன்கு அறிந்தவர். இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான ஊழல் வழக்குகள் தடதடக்கும் இந்தத் தருணத்திலும், தன்னை ஓர் அப்பாவியாகக் காட்டிக்கொள்ள, இந்த ரகசியம்தான் இதுவரை அவருக்குக் கை கொடுத்தது. ஆனால், கடந்த இரு வாரங்களில் விழுந்து இருக்கும் அடுத்தடுத்த அடிகள் அவருடைய மௌனத்தைப் பலி கேட்கின்றன.

முதல் அடியைத் தந்தவர், அவருடைய முன்னாள் சகா ஆ.ராசா. 'நான் செய்தது அனைத்தையும் பிரதமர் அறிவார். நான் செய்தது தவறு என்றால், அதைத் தடுத்திருக்க வேண்டியதுதானே?' என்று இதுவரை கூறி வந்த ராசா, நீதிமன்ற விசாரணையில் இன்னும் ஒரு படி மேலே போனார். 'பிரதமருக்குத் தெரியாது என்று அவர் சொல்லட்டும்... பார்க்கலாம்!' என்று சவால்விட்டார். வழக்கறிஞரான ராசா, ஒரு வகையில் மறைமுகமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகளை உறுதிசெய்து இருக்கிறார். ''அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளவர் அனுமதி தர விரும்பவில்லை என்றால், அதைத் தெரிவிக்கலாம். ஆனால், நடவடிக்கையே இல்லையே... ஏன்?'' என்று முன்னதாகக் கேட்டு இருந்தனர் நீதிபதிகள் ஜி.எஸ். சங்வியும் ஏ.கே.கங்குலியும். ராசாவுக்கும் பிரதமருக்கும் இடையே நிறையக் கடிதப் பரிவர்த்தனைகள் நடந்து இருக்கின்றன. முக்கியமாக 2007, நவம்பர் 2-ல் ராசாவுக்கு மன்மோகன் எழுதிய கடிதம் இப்போது உயிர்த்தெழுகிறது. அந்தக் கடிதத்தில், ஒளிவு மறைவற்ற அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு ஏல முறையைப் பரிசீலிக்குமாறு கூறுகிறார் மன்மோகன் சிங். ஆக, ஒளிவு மறைவற்ற விலை நிர்ணயத்துக்கு ஏல முறைதான் சரியானது என்பதை மன்மோகன் முழுமையாக உணர்ந்து இருக்கிறார். ஆனால், 2008, ஜன 3-ம் தேதி ராசா தன் இஷ்டம்போல் நடந்துகொண்டபோது, வேடிக்கை பார்த்தார். ஏன்?

இரண்டாவது அடியைத் தந்தது, உச்ச நீதிமன்றம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை நம்பிக்கை வாக்கெடுப்பில் காப்பாற்ற, மக்களவை உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம். இந்திய நாடாளுமன்றம் முன் ஒருபோதும் கண்டிராத வகையில், அவையில் கொண்டுவந்து லஞ்சப் பணத்தைக் கொட்டினார்கள் எதிர்க் கட்சி உறுப்பினர்கள். இந்தச் சம்பவம் நடப்பதற்கு ஓரிரு நாட்கள் முன்பே இந்தக் குதிரைப் பேரம் குறித்த முழுத் தகவல்களும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அமெரிக்கத் தூதரகம் மூலம் அனுப்பப்பட்டதாகப் பின்னாட்களில் 'விக்கிலீக்ஸ்’ தெரிவித்தது. அதாவது, காங்கிரஸார் மக்களவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கப்போகிறார்கள்; யார் எல்லாம் ஆதரிப்பார்கள்; எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே அமெரிக்க அரசு தெரிந்துவைத்து இருக்கிறது. ஆனால், சம்பவத்துக்குப் பிறகும் நம் பிரதமர் தனக்கு எதுவுமே தெரியாது என்று சத்தியம் செய்தார். நம்பினோம். இப்போது ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் ஆகியும்கூட அதுபற்றித் தெரிந்துகொள்ள காங்கிரஸுக்கோ, மன்மோகனுக்கோ விருப்பம் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் வெளிக்கொண்டு வந்து இருக்கிறது. இந்திய ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிய அந்தச் சம்பவம் குறித்து குறைந்தபட்சம் முதல் தகவல் அறிக்கைகூடப் பதிவு செய்யப்படவில்லையே ஏன் என்று கேட்டது உச்ச நீதிமன்றம்.

மூன்றாவது அடியைத் தந்தது தலைமைக் கணக்குத் தணிக்கையாளர். இது மன்மோகனின் இதயத்திலேயே விழுந்த அடி. காமன்வெல்த் போட்டி முறைகேடுகளின் சூத்ரதாரியான சுரேஷ் கல்மாடி நியமனத்துக்கும், முறைகேடுகளை யாராலும் தட்டிக்கேட்க முடியாத சூழல் ஏற்பட்டதற்கும் பிரதமர் அலுவலகமே காரணம் என்று அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம். ''அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் தத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார் கல்மாடி. இந்த நியமனத்துக்கு, பிரதமரே பொறுப்பு. 2004 டிசம்பர் 6-ல் எழுதப்பட்ட பிரதமர் அலுவலகக் கடிதம் இதை உறுதிப்படுத்துகிறது. கல்மாடி நியமனத்தால் அதிர்ச்சி அடைந்த சுனில் தத், 'இது அமைச்சர் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு முரணானது...’ என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், பிரதமர் அலுவலக முடிவு காரணமாகவே அரசுக் கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு, அரசுக்குக் கட்டுப்படாத தனியார் அமைப்பாக மாறியது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யரும் செயலராக இருந்த எஸ்.கே.அரோராவும் கல்மாடியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரதமரிடம் கல்மாடிக்கு இருந்த செல்வாக்குக்கு முன் அது எடுபடவில்லை'' என்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் 743 பக்க அறிக்கை.

இனியும் வாய் மூடி இருப்பது சாத்தியம் இல்லை. பேசுங்கள் பிரதமர் அவர்களே!

No comments: