Monday, August 8, 2011

மசாலா காளான் சமையல்

மசாலா மஷ்ரூம்

தேவையானவை: சுத்தம் செய்யப்பட்ட மஷ்ரூம் - 250 கிராம், டோஃபூ பனீர் - 100 கிராம், தயிர் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் (நீளவாக்கில் நறுக்கியது) - 2, தக்காளி புரீ (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - அரை கப், கெட்டியாக அரைத்த தேங்காய் விழுது - அரை கப், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மஷ்ரூமைப் போட்டு, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசிறி, 5 நிமிடங்கள் வைக்கவும். டோஃபூ பனீர் உடன் தயிர், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடங்கள் தனியே வைக்கவும். ஒரு கடாயில் வெண்ணெயை இட்டு உருக்கி, பிசிறி வைத்துள்ள மஷ்ரூம் கலவையை அதில் சேர்த்து வதக்கவும். பிறகு டோஃபூ பனீர் கலவையையும் சேர்த்து வதக்கி எடுக்கவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு... சீரகம், கறிவேப்பிலை தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு, அதில் தக்காளி புரீயைச் சேர்த்து நன்கு கிளறவும். வாசனை வந்ததும், தேங்காய் விழுது, உப்பு, கரம் மசாலா சேர்த்துக் கிளறவும். எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியாக வரும்போது, மஷ்ரூம் - டோஃபூ பனீர் கலவையை சேர்த்துக் கிளறி மூடவும். பரிமாறும்போது கொத்தமல்லி, ஃப்ரெஷ் க்ரீம் தூவி அலங்கரிக்கவும்.

- எஸ்.சமந்தகமணி, பெங்களூரூ

லெமன் முறுக்கு

தேவையானவை: பச்சரிசி - 4 கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - கால் கப், எள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், வெண்ணெய், எண்ணெய், உப்பு - தேவை யான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் உளுத்தம் பருப்பை வாசனை வரும் வரை வறுத்து, ஆற வைத்து பச்சரிசியுடன் சேர்த்து மெஷினில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். மாவை சல்லடையில் சலித்து, அதனுடன் உப்பு, எள், பெருங்காயத் தூள், வெண்ணெய், எலுமிச்சைச் சாறு சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை தேன் குழலாகப் பிழிந்து நன்கு வேகவிட்டு எடுக்கவும். வித்தியாசமான சுவையுடன் கரகரப்பாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------------
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்துடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

மசாலா மஷ்ரூம்: டோஃபூ பனீருடன் சிறிதளவு சீஸ் சேர்த்தால்... கூடுதல் மணத்துடனும், அதிக ருசியுடன் இருக்கும்.

லெமன் முறுக்கு: பச்சை மிளகாயை அரைத்து எடுத்த சாறு சேர்த்தால், காரம் சேர்ந்து சுவையாக இருக்கும்.

No comments: