“துரிதமாக நெருங்கும் வழக்குகளில் இருந்து தப்பிக்க, அ.தி.மு.க.வுக்கு தூது விடுகிறார் அழகிரி” இந்தப் பேச்சு, மதுரை தி.மு.க.வினரிடம் மிக அழுத்தமாக அடிபடத் தொடங்கியிருக்கிறது. டில்லிக்கு சென்றாலும் சனி, ஞாயிறு தினங்களில் மதுரைக்கு வந்துவிடும் அழகிரியை, கடந்த இரு வாரங்களாக மதுரைப் பக்கமே காண முடியவில்லை.
எப்போதும் கலகலப்பாக இருக்கும் அழகிரி வீடு வெறிச்சோடிப்போய் உள்ளது. குடும்பத்தினர் யாருமே மதுரையில் இல்லை. அவருடைய வலது, இடது கரங்கள் பாளையங்கோட்டை சிறையில் இருக்கிறார்கள். அழகிரி ஆதரவு போலீஸ் அதிகாரிகள் அனைவருமே, மதுரைக்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்டு விட்டார்கள். அண்ணனின் புதிய கட்-அவுட் எதையும் காணவில்லை.
உண்மையில் என்னதான் நடக்கிறது? அஞ்சா நெஞ்சர் சரணாகதியா? எமது தொடர்புகள் மூலம் தகவல் திரட்டினோம்.
எமக்கு கிடைத்த தகவல்களில் இருந்து, சரணாகதி பேச்சுக்கள் நடப்பது உண்மைதான். ஆனால், இரண்டாவது மூன்றாவது பார்ட்டிகள் ஊடாகவே பேச்சுக்கள் நடக்கின்றன.
மனைவி காந்தி அழகிரியைத் தவிர, மகன், மகள் குடும்பத்தினரை இந்தியாவை விட்டே வெளியே அனுப்பி விட்டார் அண்ணன். இதனால், லோக்கல் கேஸ்களில் விசாரணை, கைது, விவகாரங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றி விட்டதாக நினைக்கிறார் அவர்.
அதுவும் ஓரளவுக்கு உண்மைதான்.
நிலம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான சிவில் கேஸ்களில், இந்தியாவுக்கு வெளியே உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதானால், மாநில அரசு, மத்திய அரசை தொடர்புகொண்டு, பைல் உட்துறை அமைச்சின் ஒப்புதல் பெற்று, வெளியுறவு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டு, இன்டர்போலின் தென் ஆசிய மையத்துக்கு தகவல் கொடுத்து…. மிக நீளமான நடைமுறை அது.
பெரிய அளவிலான கிரிமினஸ் கேஸ்கள் இருந்தால்தான் அதெல்லாம் சுலபம். அல்லது அரசு ஊழல் தொடர்பான ஒரு பிளாங்கெட் கேஸ் என்டோஸ்மென்ட் இருக்க வேண்டும். அழகிரி குடும்பத்தினர் யாருமே தமிழக அரசின் முக்கிய பதவிகளில் இருந்ததில்லை. எனவே, அதற்கும் சான்ஸ் இல்லை.
மனைவியையும் இந்தியாவுக்கு வெளியே அனுப்பி விடுமாறு அட்வைஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் அண்ணனின் தன்மானப் பிரச்சினையும் இருப்பதால், ஒரு முறைக்கு இரு முறையாக யோசிக்கிறார் என்கிறார்கள். தவிர அழகிரி நாளைக்கே தி.மு.க.வைக் கைப்பற்ற சந்தர்ப்பம் கிடைத்தால், மொத்த குடும்பமுமே வெளிநாட்டுக்கு தப்பியோடியது என்ற இமேஜ் ஏற்படுவது நன்றாக இருக்காது.
“ஹை.. ஒரே செல்லில போட்டா சீட்டு வெளையாடுவோமே!”
தற்காலிகமாக வெளிநாட்டில் வசிப்பதென்றால், அழகிரியின் சாய்ஸ் மலேசியாதான் என்கிறார்கள். ஆனால், மகன், மகள் குடும்பத்தினர் பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் சென்றுவிட்ட நிலையில், மலேசியா செல்ல அவர்கள் தயாராக இல்லை. மேற்கே செல்ல இவர்களுக்கு விருப்பம் இல்லை.
கட்சிக்குள்ளும், அழகிரிக்கு எதிராகவே காரியங்கள் வேகம் எடுத்துள்ளன. ஸ்டாலின், கட்சிக்குள் தனது இருப்பை உறுதிப் படுத்திக் கொள்ள, மிகச் சுறுசுறுப்பாக காய் நகர்த்தத் தொடங்கிவிட்டார். தமிழகம் முழுவதும் டூர் அடித்து ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதுடன், கட்சிக்காரர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டார்.
இந்த ரேட்டில் போனால், தென் மாவட்டங்களில் உள்ள அழகிரி ஆதரவுக் கூட்டம் கரையத் தொடங்கிவிடும். அதன்பின் கட்சியைக் கைப்பற்றுவது என்பது வெறும் கனவாகவே போய்விடும்.
காங்கிரஸ்-தி.மு.க. உறவும், சொல்லிக் கொள்ளும் விதத்தில் இல்லை. உறவு முறிந்தால் மத்திய அமைச்சர் பதவியும் காலியாகிவிடும். அந்தப் பதவி கொடுத்த பாதுகாப்பு வளையமும் காணாமல் போய்விடும். சில்லரை கேஸில் விசாரிப்பதற்குகூட, போலீஸ் வந்து கதவைத் தட்டும்.
சிறையில் இருக்கும் ‘உற்ற நண்பர்கள்’ விவகாரம்வேறு தலைக்குமேல் கத்தியாகத் தொங்குகிறது. பொட்டு சுரேஷ் வாயைத் திறக்க முடிவெடுத்தால், கதை கந்தலாகிப் போய்விடும். சிறையிலுள்ள அட்டாக் பாண்டி, கோபி உட்பட மற்றைய உடன்பிறப்புகளுக்கு எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். ஆனால் உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா தெரியவில்லை.
போலீஸ் ‘கவனிப்பு’ தாங்காமல், அவர்களும் எதையாவது கக்கித் தொலைத்து விடலாம்.
இதுதான், 4 மாதங்களுக்கு முன் மதுரையை அரசாண்ட அஞ்சா நெஞ்சரின் இன்றைய நிலைமை. இதிலிருந்து ஓரளவுக்காவது விடுபட (குறைந்த பட்சம் தானும் மனைவியும் கைதாவதிலிருந்து தப்பித்துக் கொள்ள), அண்ணன், அ.தி.மு.க.வுடன் ஒருவித கம்பிரமைஸ் செய்து கொள்ள தயார் என்றுதான் அவரது நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
செகன்ட், தேர்ட் பார்ட்டி தூதுப் பேச்சுக்கள் டில்லியிலும், சென்னையிலும் நடப்பதாகத்தான் அடித்துச் சொல்கிறார்கள். எல்லாமே ஆரம்ப ஸ்டேஜில் இருக்கிறது. முழுமையான விபரங்கள் தெரியவர சில நாட்களோ, வாரங்களோ ஆகலாம்.
தற்போது அண்ணன், டில்லியில் உள்ள சொந்த பங்களாவில்கூட அதிகம் தங்காமல், தினத்துக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ், ஹோட்டல் என்று நாடோடித் தென்றலாக வலம் வருகிறார்.
-மதுரையிலிருந்து அதிபன் தங்கராசு, டில்லியிலிருந்து நர்மதா பானர்ஜி ஆகியோரின் குறிப்புகளுடன்,
Thanks to Viruvirupu
Tuesday, August 16, 2011
எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment